சிவகாசியில், ஆக்கிரமிப்பை கண்காணிக்க, பறக்கும் படை!
சிவகாசியில், ஆக்கிரமிப்புகளை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளையும், மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் கண்காணிப்பதற்காகவும் சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
சிவகாசி மாநகராட்சி பகுதியின் முக்கிய சாலைகளின் ஓரங்களில் நாளுக்கு நாள் நடைபாதை கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் பேருந்து நிலையப் பகுதிகள், காந்தி சாலை, புது ரோடு தெரு, நான்கு ரதவீதிகள், நாடார் லாட்ஜ் சாலை, திருத்தங்கல் சாலை, காரனேசன் சந்திப்பு, புறநகர் சாலை, சிவகாசி - திருத்தங்கல் சாலை உள்ளிட்ட பல இடங்களிலும் வாடகை கட்டிடங்களில் வியாபாரம் செய்து வருபவர்கள் சாலை வரையிலான இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இதனால் இந்தப் பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. சாலை வசதிகளை மேம்படுத்தி, போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் வேகமாக செயல்பட்டு வருகிறது. முதலில், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படுவதை தடுத்து கண்காணிக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக சிவகாசி மாநகராட்சியில், ஆக்கிரமிப்புகளை கண்காணிக்கும் பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும்படையில் மாநகராட்சியை சேர்ந்த 4 ஊழியர்கள் இருப்பார்கள்.
தினமும் காலையிலிருந்து, மாலை வரை மாநகராட்சி பகுதிகளில் சோதனை செய்து ஆக்கிரமிப்புகள் குறித்த விவரங்களை உடனடியாக மாநகராட்சி ஆணையாளருக்கு தெரியப்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் ஈடுபடுவார்கள். இந்த பறக்கும்படை குழுவினருக்கான வாகனத்தை மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் துவக்கி வைத்தார். உடன் துணை மேயர் விக்னேஷ்பிரியா, ஆணையாளர் சங்கரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.