சிவகாசி பத்ரகாளியம்மன் ஆலய சித்திரைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
2 ஆண்டுகளுக்குப் பின்பு சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா நடைபெற இருப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;
சிவகாசி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப் பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று இரவு 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றம் நிகழ்ச்சியில் ஸ்ரீபத்திரகாளியம்மன் சர்வ அலங்காரத்தில், சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து நான்கு ரதவீதிகளில் வலம் வந்தார். இதனை முன்னிட்டு கோவில் வளாகத்தில் வான வேடிக்கை நிகழ்ச்சியும், இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது. மேலும் வரும் 7ம் தேதி (சனி கிழமை) ஸ்ரீபத்திரகாளியம்மன் அரிசிக் கொட்டகை மண்டபத்தில் எழுந்தருளும் 5ம் திருவிழாவும், 8ம் தேதி (ஞாயிறு கிழமை) 6ம் திருவிழா மண்டபத்தில், நவரத்தின சிம்மாசனத்தில் அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
10ம் தேதி (செவ்வாய் கிழமை) சித்திரை பொங்கல் விழாவும், 11ம் தேதி (புதன் கிழமை) திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்கினிச்சட்டி, கயிறுகுத்து திருவிழாவும் நடைபெறுகிறது. 13ம் தேதி (வெள்ளி கிழமை) சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெறுகிறது. சித்திரை திருவிழாவின் ஒவ்வொரு நாளும் அம்மன் வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரதவீதிகள் வலம் வருவார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவாஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.