சிவகாசி; பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கான போதை எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.;
இந்நிகழ்ச்சிக்கு, நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய மாநில தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் மெட்டில் தாமேரி வரவேற்றார்.
கருத்தரங்கில் சிவகாசி நகர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் செல்வராஜ், பட்டாசு மற்றும் தீப்பெட்டி (தனி) தாசில்தார் சாந்தி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், தாசில்தார் சாந்தி பேசியதாவது,
நாட்டின் எதிர்காலமும், ஒவ்வொரு வீட்டின் எதிர்காலமும் மாணவர்களின் கைகளில் தான் உள்ளது. தன்னம்பிக்கை கொண்ட மாணவர்கள் ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும். தனிமனித ஒழுக்கம் என்பது, சாலைகளில் நடந்து செல்லும் போதும் இருக்க வேண்டும். சாலையில் வாகனங்கள் ஓட்டிச் செல்லும் போதும் இருக்க வேண்டும். பாதுகாப்பு என்பது நமது அனைவருக்குமானது என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.
மேலும், தற்போது சமூக வலைத்தளங்களில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் போதைப் பழக்கத்தில் இருப்பது போல ஏராளமான காணொலிகள் வருகின்றன. மாணவர்களுக்கு போதைப் பழக்கம் என்பது விளையாட்டிற்கு கூட இருக்கக்கூடாது. விளையாட்டுத்தனமாக ஆரம்பிக்கும் பழக்கம் உங்கள் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிடும். போதைப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது என்று, மாணவர்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். கல்வியில் சிறந்த மாணவர்களே அரசுப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு நல்ல வேலை வாய்ப்புகளை பெற முடியும் என்றும் பேசினார்.
உடற்கல்வி ஆசிரியர் ஜெயக்கொடி நன்றி கூறினார்.