சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரங்கோலி போட்டி
சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ரங்கோலி போட்டி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி யூனியன் அலுவலகத்தில், சென்னையில் நடைபெற இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வு ரங்கோலி போட்டிகள் நடைபெற்றது.
மகளிர் சுயஉதவி குழுவைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டிகளை யூனியன் தலைவர் முத்துலட்சுமி, துணை தலைவர் விவேகன்ராஜ் துவக்கி வைத்தனர். யூனியன் அலுவலக வளாகம் முழுவதும் மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் வண்ணமயமான ரங்கோலி கோலங்களை வரைந்தனர். இதனை பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.
சிறந்த ரங்கோலி வரைந்த குழுவினருக்கு யூனியன் தலைவர் முத்துலட்சுமி பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் சிறப்பாக செய்திருந்தனர்.