விருதுநகர் புத்தகக்கண்காட்சியில் பார்வையற்ற ஆசிரியை எழுதிய நூல்கள் வெளியீடு
சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவ புத்தக வாசிப்பு முக்கியப் பங்கு வசிக்கிறது.
விருதுநகர் புத்தகக் கண்காட்சியில் பார்வையில்லாத ஆசிரியை எழுதிய 2 நூல்கள் வெளியிடப்பட்டது.
சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவ புத்தக வாசிப்பு முக்கியப் பங்கு வசிக்கிறது. எனவே, மாணவர்களிடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை ஒரு மக்கள் இயக்கமாக புத்தக வாசிப்பை எடுத்துச் செல்ல, சென்னை புத்தகக்காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இலக்கியச் செழுமை மிக்கதமிழ்மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில்,புத்தகக் காட்சிகள் மற்றும் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், விருதுநகரில் முதல்முறையாக மாவட்ட நிர்வாகமும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும் இணைந்து, விருதுநகரில் அமைந்துள்ள கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் 17.11.2022 முதல் 27.11.2022 வரை மாபெரும் புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது.
விருதுநகரில் மாவட்ட நிர்வாகம் சார்பில், முதலாவது புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், சொற்பொழிவு, கருத்தரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. புத்தகக் கண்காட்சியில், பார்வையற்ற ஆசிரியை எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது. விருதுநகர் அருகேயுள்ள சூலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் அருண்பிரியா. பார்வை இழந்த இவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
மேலும் விருதுநகரில் உள்ள தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை தமிழ் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். பார்வை குறைபாடு இருந்தாலும் கதைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம் உள்ள இவர் எழுதுவதையும் தொடர்ந்து செய்து வருகிறார். இவர் எழுதிய 'சங்க மாந்தரின் அகம்சார் ஆளுமை', 'மறம் எனும் மானம்' ஆகிய இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா, புத்தகக் கண்காட்சியில் நடைபெற்றது.
நூல்களை, மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில், பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம், கதை சொல்லி பவா செல்லத்துரை வெளியிட்டனர். செந்திக்குமார நாடார் கல்லூரி முதல்வர் சுந்தரபாண்டியன், பேராசிரியர் சாமி ஆகியோர் நூல்களை பெற்றுக் கொண்டனர். எழுத்தாளர் அருண்பிரியாவிற்கு, சிறப்பு விருந்தினர்கள் பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் சங்கத்தினர் இணைந்து புத்தக திருவிழாவை நடத்த திட்டமிட்டனர். அதன்படி புத்தக திருவிழா நவம்பர் 17ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடத்தப்பட்டது. புத்தக திருவிழாவிற்கு ஶ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் வசிக்கும் அரிய வகை உயிரினமான சாம்பல் நிற அணிலை லோகோவாக தேர்வு செய்து அதற்கு 'விரு' என்று பெயரிடப்பட்டது.
இந்நிலையில் நவம்பர் 17 அன்று மாலை 5 மணியளவில், கேவிஎஸ் பள்ளி மைதானத்தில் புத்தக திருவிழாவை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.உடன் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, விருதுநகர் நகர் மன்ற தலைவர், சிவகாசி மாநகராட்சி மேயர் ஆகியோர் கலந்து கொண்டனர். காலை 11 மணி முதல் மாலை 9 மணி வரை நடை பெற உள்ள கண்காட்சியில் பார்வையாளர்களுக்கென நிறைய போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன.
இதுகுறித்து புத்தக கண்காட்சியில் அரங்கு வைத்துள்ள புத்தக விற்பனையாளர் கூறுகையில், புத்தக கண்காட்சியில் வரலாறு, ஆன்மிகம், அறிவியல் சம்பந்தமான பல புத்தகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. பொன்னியின் செல்வன் புத்தகம் அதிகளவில் தேடப்பட்டதாக தெரிவித்தார். மொத்தமாக 110 அரங்குகள் அமைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும் விருதுநகர் மாவட்டத்தில் இவ்வளவு பெரிய புத்தக திருவிழா நடைபெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.