சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடி படம் வைப்பதில் பிரச்னை

சிவகாசி மாநகராட்சி கூட்டரங்கில் பிரதமர் மோடி படத்தை வைக்க முயன்ற பாஜக கவுன்சிலருக்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு

Update: 2022-05-28 09:15 GMT

சிவகாசி மாநகராட்சி கூட்டரங்கில் பிரதமர் மோடி படத்தை வைக்க முயன்ற பாஜக கவுன்சிலர்

சிவகாசி மாநகராட்சி கூட்டரங்கில் பிரதமர்  மோடி படத்தை  வைக்க முயன்ற பாஜக கவுன்சிலருக்கு திமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியின், மாமன்ற உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணை மேயர் விக்னேஷ்பிரியா, மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சொத்துவரி உயர்வு குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. சொத்துவரி உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று கவுன்சிலர்கள் பலர் முறையிட்டனர். மேலும் அதிமுக கவுன்சிலர்கள் பேசும்போது, சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதியில் உள்ள பெயர் பலகைகள், பல அரசு கட்டிடங்களில் சிவகாசி நகராட்சி, திருத்தங்கல் நகராட்சி என பழைய பெயர் பலகைகளே இருக்கின்றன. நமது சிவகாசி மாநகராட்சியாக மாறிவிட்டதா இல்லையா என்பதை அதிகாரிகளும், மாமன்ற மேயரும் தான் கூற வேண்டும் என்று கூறினர். அதற்கு பதிலளித்து பேசிய ஆணையாளர், விரைவில் பெயர் பலகைகளில் சிவகாசி மாநகராட்சி என்று மாற்றப்படும் என்று கூறினார்.

கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒரே ஒரு கவுன்சிலரான குமரிபாஸ்கர், தான் கொண்டு வந்திருந்த பிரதமர் நரேந்திரமோடியின் படத்தை, மேயர் இருக்கையருகே கொண்டுசென்று பிரதமர் படத்தை மாமன்ற கூட்டரங்கில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதற்கு திமுக மற்றும் திமுக கூட்டணிக்கட்சி கவுன்சிலர்கள் அனைவரும் எழுந்துநின்று, பிரதமர் படத்தை மாமன்ற கூட்டரங்கில் வைக்கக்கூடாது என்று கூறி ஒட்டு மொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் மாநகராட்சி அதிகாரிகள், பாஜக கவுன்சிலர் குமரிபாஸ்கரை சமாதானம் செய்து கூட்டரங்கில் இருந்து அழைத்துச் சென்றனர்.

Tags:    

Similar News