சிவகாசியில் இருந்து தொலைதூரங்களுக்கு இயக்கப்பட்ட தனியார் பஸ்கள்
மாவட்டத்தில் பெரும்பான்மையான அரசு பேருந்துகள் இயங்காத நிலையில், தனியார் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன.;
சிவகாசியில், பொது வேலை நிறுத்தம் காரணமாக அரசு பேருந்துகள் இயங்காத நிலையில் தொலைதூரங்களுக்கு தனியார் மினி பேருந்துகள் இயக்கப்பட்டன.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் பெரும்பான்மையான அரசு பேருந்துகள் இயங்காத நிலையில், தனியார் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன.
வேலைக்கு செல்பவர்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் என தனியார் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. சிவகாசி பகுதியில் காலையில் இயங்கிய அரசு பேருந்துகளும், நண்பகலில் ஓட்டுனர், நடத்துனர் இல்லாததால் நிறுத்தப்பட்டன.குறிப்பாக கிராமப்பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் முழுமையாக இயங்காத நிலையே இருந்தது. இதனால் தனியார் மினி பேருந்துகள் திருவேங்கடம், தாயில்பட்டி, சாத்தூர், விருதுநகர் உள்ளிட்ட தொலை தூரங்களுக்கும் இயக்கப்பட்டது. அரசு பேருந்துகள் இல்லாத நிலையில் பயணிகளும் மினி பேருந்துகளில் ஏறி பயணம் செய்தனர். மாலை நேரத்தில் பணிமுடித்து செல்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவர்கள் வீடுகளுக்கு திரும்புவதில் சிரமம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.