விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள வெம்பக்கோட்டை - வனலிங்கபுரம் பகுதியில் உள்ள காப்புக் காடுகளில், காட்டு முயல்களை சிலர் வேட்டையாடி வருவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில், சிவகாசி வனச்சரக அலுவலர் பூவேந்தன் தலைமையில், வனத்துறையினர் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராஜபாளையம் அருகேயுள் சத்திரப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராமசாமி (30), மடத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த மதியழகன் (32) ஆகிய இருவரும் முயல் வேட்டையில் ஈடுபட்டது தெரிந்தது. வனத்துறை அலுவலர் பூவேந்தன், முயல் வேட்டையில் ஈடுபட்ட 2 பேரையும் கைது செய்தார். அவர்களிடமிருந்து வேட்டையாடப்பட்ட 2 முயல்களை வனத்துறை ஊழியர்கள் பறிமுதல் செய்தனர். முயல்களை வேட்டையாடிய ராமசாமி மற்றும் மதியழகன் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் வேட்டைத் தடுப்பு காவலர்களைக் கொண்டு, விலங்குகள் வேட்டையாடுவதை தடுக்க உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி,மயில், மான் மற்றும் காட்டுப்பன்றி, முயல், போன்ற விலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.