சிவகாசி அருகே எம்.பி.க்கள் ரயில் மறியலால் பரபரப்பு

சென்னை-கொல்லம் விரைவு ரயில் திருத்தங்கல் சிவகாசி ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்வதை கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட்டனர்

Update: 2022-09-23 17:00 GMT

சிவகாசி ரயில் நிலையம் முன்பு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏ மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

சென்னை - கொல்லம் விரைவு ரயில் திருத்தங்கல், சிவகாசி ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்வதை கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏ தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மிகப்பெரும் தொழில் மற்றும் வர்த்தக நகராக இருந்து வருகிறது. சிவகாசி பகுதிக்கு தொழில்கள் சம்பந்தமாக தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். தமிழகத்தின் தலைநகரான சென்னையிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிவகாசிக்கு வருகின்றனர். சிவகாசிக்கு வரும் பெரும்பாலான மக்கள் ரயில்களில் வருவது மிகவும் வசதியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இருந்து, கேரள மாநிலம் கொல்லத்திற்கு இயக்கப்பட்டு வரும் விரைவு ரயில்,நள்ளிரவு 1.30 மணியளவில் திருத்தங்கல் மற்றும் சிவகாசி ரயில் நிலையங்கள் வழியாக செல்கின்றது.

ஆனால் இந்த விரைவு ரயில் விருதுநகருக்கு அடுத்ததாக திருவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் தான் நிறுத்தப்படுகிறது. இதனால் திருத்தங்கல் மற்றும் சிவகாசி ரயில் நிலையங்களில் இறங்க வேண்டிய பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சென்னை - கொல்லம் விரைவு ரயில் திருத்தங்கல், சிவகாசி ரயில் நிலையங்களில் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தப்பகுதி மக்கள், ரயில் பயணிகள், பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இது குறித்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நாடாளுமன்றத்தில் விவாதம் செய்தார். ஒன்றிய ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து, கொல்லம் விரைவு ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்தார். பொதுமக்கள், ரயில் பயணிகள், நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கைகள் எதையும் ஒன்றிய அரசு கண்டு கொள்ளவில்லை.

இதனால் சிவகாசி வர்த்தக சங்கங்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து ரயில் போராட்டக்குழு அமைக்கப்பட்டு, ஒன்றிய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், சிவகாசி எம்எல்ஏ அசோகன், முன்னாள் எம்.பி. லிங்கம், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி,

மற்றும் காங்கிரஸ் கட்சியினர், கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மனித நேய மக்கள் கட்சி, யூனியன் முஸ்லீம் லீக், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல அரசியல் கட்சி நிர்வாகிகள், ரயில் போராட்டக்குழுவினர், சமூக ஆர்வலர்கள் இணைந்து நேற்று மாலை ரயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக, சிவகாசி ரயில் நிலையத்தின் முன்பு திரண்டனர். ரயில் மறியல் செய்வதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால், எம்.பி. சு.வெங்கடேசன் தலைமையில் ரயில் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் போலீசாரின் தடுப்புகளை தாண்டி ரயில் நிலையத்திற்குள் நுழைந்து, தண்டவாளத்தில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார், குண்டுகட்டாக தூக்கிச் சென்று அப்புறப்படுத்தினர். இதனால் சிவகாசி ரயில் நிலையப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் பேசும்போது, பெரிய வர்த்தக, வணிக நகராக இருக்கும் சிவகாசியில், ரயில் நிலையத்தில், இந்த வழியாக செல்லும் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை.

இதனால் பயனடைவது பொதுமக்கள் தான். இந்த அடிப்படையைக்கூட புரிந்து கொள்ளாமல் இருக்கிறது ஒன்றிய மோடி அரசு. இந்த பிரச்சினை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளு மன்றத்திலேயே ஒன்றிய ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை வைத்து பேசினார். பொதுமக்கள் கோரிக்கை, பயணிகள் கோரிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை எதையும் மோடி அரசு காது கொடுத்து கேட்பதில்லை.

ஒன்றிய மோடி அரசு ரயில் நிலையத்தை விலைக்கு கேட்டால் கூட கொடுத்துவிடும், ஆனால் ஒரு ரயி்ல் நின்று செல்ல வேண்டும் என்று நாடாளுமன்றம், அமைச்சர், அதிகாரிகள் என்று பல்வேறு கோரிக்கை மனு கொடுத்தாலும் கண்டுகொள்ளாத நிலையே உள்ளது. ஒரு அத்தியாவசிய, அடிப்படையான, மிகவும் தேவையான ஒரு கோரிக்கைக்கு கூடமக்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டிய நிலை உள்ளது. சாமானிய மக்களின் கோரிக்கைகளை, தேவைகளை புறந்தள்ளுவது மட்டுமே ஒன்றிய மோடி அரசின் சாதனையாக உள்ளது என்று எம்.பி. சு.வெங்கடேசன் பேசினார்.

Tags:    

Similar News