சிவகாசியில் கல்விக் கண்காட்சியை துவக்கி வைத்த மேயர்
சாத்தூர் சாலையில் உள்ள கம்மவார் திருமண மண்டபத்தில், 2 நாட்கள் நடைபெறும் கல்வி கண்காட்சியை மேயர் சங்கீதா இன்பம் திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிளஸ்டூ முடித்த மாணவர்கள், கல்லூரிகளில் சேர்ந்து உயர்கல்வி படிப்பதற்கான கல்வி வழிகாட்டி கண்காட்சியை சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் துவக்கி வைத்தார். சாத்தூர் சாலையில் உள்ள கம்மவார் திருமண மண்டபத்தில், 2 நாட்கள் நடைபெறும் கல்வி கண்காட்சியை மேயர் சங்கீதா இன்பம் திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மேயர் சங்கீதா இன்பம் பேசும்போது, பள்ளி மாணவர்களின் எதிர் காலம் கல்லூரி படிப்பில் தான் உள்ளது. தரமான கல்வி படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருப்பதுடன், குடும்பத்திற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும். கல்வி கண்காட்சியை பார்வையிடும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் சிறந்த கல்லூரியை தேர்வு செய்து மாணவர்களின் உயர்கல்வி கனவுகளை நனவாக்க வேண்டும் என்று பேசினார்.
கல்வி கண்காட்சியில் விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த கலைக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள், சமையல் கலை கல்லூரிகள், தொழிற் பயிற்சி கல்லூரிகள, பாலிடெக்னிக் கல்லூரிகள் பல கலந்து கொண்டு தங்களது கல்லூரிகளில் உள்ள வசதிகள் குறித்தும், வேலை வாய்ப்புகள் குறித்தும், கட்டண சலுகை விவரங்கள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கமளித்தனர். பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கும் நிலையில், சிவகாசியில் நடைபெற்றுவரும் கல்வி கண்காட்சி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.