சிவன் ஆலயத்தில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா
விருதுநகர் அருகே கல்குறிச்சியில் உள்ள சிவாலயத்தில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா நடைபெற்றது
விருதுநகர் மாவட்டம், கல்குறிச்சி சிவாலயத்தில், மாணிக்கவாசகர் குருபூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.
63 நாயன்மார்களில் ஒருவரும், சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவருமான மாணிக்கவாசகருக்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று குருபூஜை கொண்டாடப்படுவது வழக்கம்.விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆனந்தமீனாட்சி சமேத அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி, சுந்தரர், அப்பர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகருக்கு மஞ்சள், திரவிய பொடி, வில்வ பொடி, அருகம்புல் பொடி, தேன், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், சுவாமி-அம்பாள், சமயக்குரவர்கள் நால்வர் ஆகியோர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தனர்.
மங்கள தீபம் நடைபெற்றது. ஓதுவார்கள், மாணிக்கவாசகர் பெருமான் இயற்றிய தேவாரப்பாடல்களை பாடி வழிபாடு செய்தனர்.வேத மந்திரங்கள் முழங்க, பஞ்ச புராணம், பாராயணம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. மாணிக்கவாசகர் பெருமான் உற்சவமூர்த்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பிரகார பிரதட்சணம் செய்யப்பட்டது. பின்னர், கல்குறிச்சி பகுதிகளில் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா நடைபெற்றது. பக்தர்கள் வீடுகள்தோறும் தீபாராதனை செய்தனர். குருபூஜை நிகழ்ச்சியில், கல்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.