சிவகாசி மாநகராட்சி சார்பில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

சிவகாசி மாநகராட்சி சார்பில் திருத்தங்கலில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2022-03-23 11:23 GMT

சிவகாசி மாநகராட்சி சார்பில் வருமுன் காப்போம் மருத்துவமுகாம் நடந்தது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில், தமிழக அரசின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

திருத்தங்கல் கலைமகள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமை, சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். முதற்கட்டமாக சிவகாசி மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை, மருத்துவ ஆலோசனை மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான பரிந்துரைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மருத்துவர் கலுசிவலிங்கம், வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் வைரகுமார் சிறப்புரையாற்றினர். மருத்துவ முகாமில் சர்க்கரை நோய், உப்புச்சத்து குறைபாடு, ரத்த அழுத்தம், இருதய பரிசோதனை, கண் பரிசோதனை, கர்ப்பிணி பெண்களுக்கான சிறப்பு பரிசோதனைகள், கர்ப்பப்பை புற்று நோய் பரிசோதனை, மார்பக புற்று நோய் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.

இந்த மருத்துவ முகாமில் 455 பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் சிவகாசி மாநகராட்சி துணை மேயர் விக்னேஷ்பிரியா, ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், செவிலியர்கள், லேப் டெக்னிசியன்கள் பலர் கலந்து கொண்டனர். மருத்துவ முகாம் ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயசந்திரன், துப்புரவு ஆய்வாளர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News