விருதுநகர் மாவட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கும் தி.மு.க. முப்பெரும் விழா

விருதுநகர் மாவட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கும் தி.மு.க. முப்பெரும் விழா வருகிற 15ம்தேதி நடைபெற உள்ளது.;

Update: 2022-09-04 01:38 GMT

விருது நகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

விருதுநகர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் காரியாபட்டி அருகேயுள்ள மல்லாங்கிணற்றில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அமைச்சர் தங்கம்தென்னரசு கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர்கள் பேசும்போது, விருதுநகரில் வரும் 15ம் தேதி தி.மு.க. கட்சியின் முப்பெரும் விழா நடைபெறுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்க இருக்கிறார். மேலும் ஆண்டுதோறும் வழங்கப்படும் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது.

விருதுநகருக்கு வருகை தரும் முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு வழங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து முதல்வர் ஸ்டாலினுக்கு மகத்தான வரவேற்பை வழங்க வேண்டும் என்று செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர்கள் பேசினர். கூட்டத்தில் விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News