சிவகாசி - மதுரை பகுதிகளில் பலத்த மழை: சாலைகளில் தேங்கிய மழைநீர்
மதுரை மாவட்டத்தில் பகல் நேரத்தில் கடும் வெப்பம் நிலவுகிறது. மாலை நேரத்தில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்கிறது
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இன்று மாலை சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.
சிவகாசியில், கடந்த சில நாட்களாக கோடை காலம் போல கடுமையான வெயில் இருந்து வந்தது. கடும் வெயில் காரணமாக இரவு நேரங்களிலும் கடும் வெட்கையாக இருந்தது. கடந்த 2 நாட்களாக காலை நேரத்தில் கடுமையான வெயில் இருந்தாலும், மாலை நேரங்களில் மேகங்கள் திரண்டு வந்து குளிர்ந்த காற்று வீசியது.
ஆனால், மழை பெய்யாமல் லேசான தூறல் மழை மட்டுமே பெய்தது. இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல கடுமையான வெயில் வாட்டி எடுத்து வந்தது. மாலை 4 மணியளவில் மேகங்கள் திரண்டு வந்து லேசான சாரல் மழை பெய்யத் தொடங்கியது. சற்று நேரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
சிவகாசி நகர் மற்றும் புறநகர் பகுதிகள், சசிநகர், சித்துராஜபுரம், விஸ்வநத்தம், திருத்தங்கல், அம்மன் நகர், நாரணாபுரம், செங்கமலநாச்சியார்புரம், செங்கமலப்பட்டி, மாரனேரி, விளாம்பட்டி, மாதாங்கோவில்பட்டி, ஊராம்பட்டி, உப்புப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளிலும் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பின்பு பெய்த பலத்த மழையால் சிவகாசி பகுதிகளில் வெப்பம் சற்று தணிந்துள்ளது. திடீர் மழையால் சிவகாசி பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதே போல, மதுரையில் மூன்றாம் நாளாக தொடர் மழை பெய்தது. மதுரை மாவட்டத்தில், பல இடங்களில் மூன்றாவது நாளாக மாலை நேரத்தில் பலத்த மழை பெய்தது .மதுரை மாவட்டத்தில் பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவுகிறது .மாலை நேரங்களில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்கிறது.
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளான சோழவந்தான், வாடிப்பட்டி, சமயநல்லூர், திருமங்கலம் ,மேலூர், கொட்டாம்பட்டி, கீழவளவு, அழகர் கோவில், ஊர்மெச்சி குளம், கருப்பாயூரணி ஆகிய பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது.
தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், மதுரை நகரில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் நீர் நிரம்பி பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக உள்ளது. மேலும், மதுரை நகரில் அண்ணா நகர் மேலமடை, தாசில்தார் நகர் ,ஜூபிலி டவுன், கோமதிபுரம், எஸ் .எஸ் .காலனி ஆகிய பகுதிகளில், சாலைகளில் கழிவு நீர் தேங்கி குளம் போல காட்சி அளிக்கிறது.
இதனால், இருசக்கர வாகனத்தில் செல்வோர் கடும் அவதி அடைகின்ற நிலை ஏற்படுகிறது. மதுரை மாநகராட்சி நிர்வாகமானது வெகு விரைவில் சாலைகளைசெப்பனிட்டு, மழை நீர் மற்றும் கழிவு செல்வதற்கு வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் துரித நடவடிக்கை எடுத்து, சாலைகளில் தேங்கும் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.