சிவகாசி அருகே தனியார் நிறுவனம் சார்பில் பாலின சமத்துவ விழா

சிவகாசி அருகே தனியார் நிறுவனம் சார்பில் பாலின சமத்துவ விழா நடைபெற்றது.

Update: 2022-04-10 04:37 GMT
சிவகாசி அருகே பாலின சமத்துவ விழா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள வெம்பக்கோட்டை, மீனாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் பாலின சமத்துவ விழா நடைபெற்றது. சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் பாலின சமத்துவ விழா, இன்றைய பாலின சமத்துவம் நாளைய வளம் குன்றாத வளமை என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டது.

ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகி கல்பனாசங்கர் ஆலோசனையில், நிறுவன தலைவர் சீனிவாசன் வழிகாட்டுதலில், பொது மேலாளர் மோசஸ்சாமுவேல் விழாவை ஒருங்கிணைப்பு செய்தார். விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரி வரவேற்றார். முதன்மை விருந்தினராக, வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி கலந்துகொண்டு, சிறப்பாக செயல்பட்ட மகளிர் குழு இணையங்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

பாலின சமத்துவத்திற்காக அனைவரும் பாடுபட வேண்டியதன் அவசியம் குறித்து ஜெயபிரகாஷ் பேசினார். நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய மாநில தலைவர் சுப்பிரமணியம் பேசும்போது, பெண்கள் தற்காப்புடன், தற்சார்புடன் வாழ வேண்டும். சுயஉதவிக்குழு பெண்களின் நிர்வாக திறனால் அவர்களின் வாழ்க்கை மட்டுமல்லாமல், அவர்களை சார்ந்திருப்பவர்களின் வாழ்க்கையும் உயர்ந்து வருகிறது. தற்போது செல்போன்களில் உள்ள சில செயலிகளால் பெண்கள் ஆபத்தில் சிக்கி கொள்கின்றனர். போன் செயலிகளை கவனமாக கையாள வேண்டும். சைபர் க்ரைம் குற்றங்களால் பெண்கள் படும் சிரமமும், துயரமும் மிக அதிகமாக உள்ளது. எனவே செல்போன் பயனபடுத்தும் பெண்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் அவற்றை கையாள வேண்டும், தங்களை யாராவது தவறாக எண்ணி விடுவார்களோ என்று அச்சப்படாமல், எந்த ஒரு விசயத்திலும் துணிச்சலுடன், கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

காஞ்சிபுரம் பகுதியின் பயிற்சி மேலாளர் கோவிந்தராஜன், மகளிர் குழு இணைய பொறுப்பாளர்கள் முத்துசெல்வி, ராஜேஸ்வரி, தமிழக பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் கிருஷ்ணவேணி, பெல்ஸ்டார் நிறுவன மேலாளர் காளிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி நன்றி கூறினார்.

Tags:    

Similar News