மூதாட்டி கொலை வழக்கில் பெண் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
கொலை செய்த குற்றவாளி தங்கேஸ்வரிக்கு, ஆயுள் தண்டனையும் 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்;
ராஜபாளையம் அருகே, நகையை திருடுவதற்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள முகவூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (68). இவர் நகைகளை அடகு பிடித்து வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த 2016ம் ஆண்டு, டிசம்பர் மாதம் ஜெயலட்சுமி அவரது வீட்டிற்குள் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். சம்பவம் குறித்து தளவாய்புரம் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சேவுகபாண்டியன் மனைவி தங்கேஸ்வரி (47) என்பவர், ஜெயலட்சுமி வைத்திருந்த ஒரு லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடுவதற்காக கொலை செய்தது தெரிந்தது.இதனையடுத்து தங்கேஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்த வழக்கு திருவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள், நகையை திருடுவதற்காக மூதாட்டி ஜெயலட்சுமியை கொலை செய்த குற்றவாளி தங்கேஸ்வரிக்கு, ஆயுள் தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
திருவில்லிபுத்தூரில், கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண் கைது.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் பேருந்து நிலையப் பகுதியில், கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலைய போலீசார், பேருந்து நலையத்தை சுற்றியுள்ள பகுதி களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்தப் பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை பிடித்து போலீசார் விசாரித் தனர். போலீசாரிடம் சிக்கிய பெண் அதே பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வி (45) என்றும், அவர் விற்பனை செய்வதற்காக 2 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த கலைச்செல்வியை போலீசார் கைது செய்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை, போலீசார் பறிமுதல் செய்தனர்.