சிவகாசியிலிருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாகச் சென்ற பக்தர்கள்

பாதயாத்திரை செல்லும் ஏராளமான பக்தர்கள் மயில் காவடி, புஷ்பக்காவடி, பன்னீர் காவடி சுமந்து செல்கின்றனர்

Update: 2023-01-10 00:45 GMT

சிவகாசியில் இருந்து திருச்செந்தூருக்கு  பாதயாத்திரையாகச்செல்லும் ஏாளமான பக்தரர்கள்

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இருந்து ஏராளமான முருக பக்தர்கள், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

சிவகாசி பராசக்தி காலனி பகுதியில் உள்ள கடவுளை காண கட்டணம் இல்லை முருக பக்தர்கள் பாதயாத்திரைக்குழு சார்பாக, ஆண்டு தோறும் மார்கழி மாதம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மாலையணிந்து விரதம் துவங்குவார்கள்.

இந்த ஆண்டு பாதயாத்திரை செல்வதற்காக 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், கடந்த சில வாரங்களாக மாலையணிந்து விரதம் இருந்து வந்தனர். பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்  சிவகாசியில் உள்ள பிரசித்திபெற்ற சிவன் கோவில், கருப்பசாமி கோவில், மாரியம்மன் கோவில் மற்றும் முருகன் கோவில்களுக்குச் சென்று சிறப்பு பூஜைகள் செய்த பின்பு, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையை துவக்கினர்.

இதில் ஏராளமான பக்தர்கள் மயில் காவடி, புஷ்பக்காவடி, பன்னீர் காவடி சுமந்து செல்கின்றனர். பாதயாத்திரை செல்லும் பக்தர்களை, அவர்களது உறவினர்கள் திரண்டுவந்து வழியனுப்பி வைத்தனர். இன்று சிவகாசி பகுதியில் இருந்து, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பல்வேறு குழுக்களைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையை துவங்கியுள்ளனர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் இந்திய தீபகற்பத்தின் தென் மேற்கே வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும். முருக கடவுள் தேவசேனாதிபதியாக வடிவெடுத்து, தீமையின் வடிவிலான சூர பத்மனை சம்ஹாரம் செய்த திருத்தலம். தமிழர்கள் இந்த நிகழ்வினை ஆண்டுதோறும் சம்ஹார திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். முருகப்பெருமான் பழந்தமிழ் இலக்கியங்களில் சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்றார். தூத்துக்குடி மாவட்டத்தில், வங்காள விரிகுடா கடற்கரையில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. இத்திருத்தலம் சென்னையில் இருந்து 600 கி.மீ தொலைவில் உள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்திருத்தலம் 2000-3000 ஆண்டுகள் முற்பட்டதாகும். இத்திருத்தலம் முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோயிலாகும். இக்கோயில் அமைந்துள்ள இடம் திருச்சீரலைவாய் என சான்றோர்களால் அழைக்கப்பட்டது. 157 அடி உயரம் கொண்ட இக்கோயிலின் கோபுரம், ஒன்பது ஸ்தலங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்ட பின்பு, தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இத்தலத்தில் சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலக்கையில் தாமரை மலருடன் அருள்கின்றார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார்.

திருச்செந்தூர் முருகன் சந்நிதியின் மேற்கு திசையில் இராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலைப் பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி திருவிழா நடைபெறும் போது, முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

Tags:    

Similar News