சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு
இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்க அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பரவலாக கோரிக்கைகள் எழுந்துள்ளன
பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஒருவர் இறப்பு: இருவர் காயம்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கங்கர்செவல் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் படுகாயமடைந்த 3 பேரில் ஒருவர் உயிரிழந்தார்.
கங்கர்செவல் கிராமத்தில் கடந்த 4ம் தேதி விக்டோரியா பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தில் படுகாயமடைத்த கணேசன், ராஜா, முத்தம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேரில், கணேசன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக ஆங்காங்கே பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்துகள் ஏற்பட்டு பலர் பலியாகும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. கிருஷ்ணகிரி, விருதுநகர், மயிலாடுதுறை என பல்வேறு மாவட்டங்களிலும் வெடி விபத்துகள் நிகழ்ந்து பலர் பலியாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்க அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பரவலாக கோரிக்கைகள் எழுந்துள்ளன.
தீபாவளிப் பண்டிகை வருவதை முன்னிட்டு பட்டாசு தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், மருந்துக் கலவைகளை பயன்படுத்துவது குறித்தும், மீதமுள்ள மருந்துக் கலவைகளை அகற்றுவது குறித்தும், கழிவுப் பட்டாசுகளை அகற்றுவது குறித்தும், பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அதிகாரிகள் எடுத்துக்கூறி அவர்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, இனி வருங்காலங்களில் பட்டாசு தொழிற்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதை தடுத்து நிறுத்த வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்