விருதுநகர் மாவட்டத்தில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு

விருதுநகர் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.;

Update: 2023-09-08 10:47 GMT

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன்பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருது நகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், கண்டுகொண்டான் மாணிக்கம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் 15ஆவது நிதி குழு மானியத்தின் கீழ் ரூ.42.65 இலட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது.

மானூர் ஊராட்சியில், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.144.40 இலட்சம் மதிப்பில் திருவில்லிபுத்தூர்- பார்த்திபனூர் சாலையில் இருந்து மானூருக்கு சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது.

மறையூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பயணிகள் நிழற்குடை கட்டப்படுகிறது.

டி.கடம்பன்குளம் ஊராட்சி கிழவிகுளம் கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.18.58 இலட்சம் மதிப்பில் சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது, கிளவிகுளம் கிராமத்தில் ரூ.1.95 இலட்சம் மதிப்பில் பெருமளவு மரக்கன்றுகள் நடப்பட்டு வரும் பணிகள் மற்றும் ஆண்டியேந்தல் ஊராட்சி எஸ். வல்லிக்குளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.43 இலட்சம் மதிப்பில் புதிய சமையல் கூடம் கட்டப்பட்டு வருவதையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் மதிப்பில் மிதிவண்டி நிறுத்தக் கூடம் கட்டப்பட்டு வருகிறது.

ஆண்டியேந்தல் கிராமத்தில், ரூ.23.56 இலட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்படுகிறது. மேலும், நரிக்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், பெரியகுளம் கண்மாய் வரத்துக்கால்வாயில் உறிஞ்சுகுழிகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன்நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைந்தும், தரமாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

பின்னர், மருது பாண்டியர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுடன் இலக்கை நிர்ணயிப்பது, அதை நோக்கிய பயணத்தை மேற்கொள்வது குறித்தும், உயர்கல்விக்கு தேசிய அளவில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடினார். மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி பயில்வதற்காக அரசு மூலம் வழங்கப்படும் 7.5 சதவிகித ஒதுக்கீடு, புதுமை பெண் திட்டம் உள்ளிட்டவைகள் குறித்து எடுத்து கூறி, கல்வியறிவு, திறமை ஆகியவற்றில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு, நல்ல ஒரு நிலைமைக்கு சென்று, சிறந்த ஒரு குடிமகனாக உருவாக வேண்டும் என அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும், ஒரு செயலின் போது ஏற்படும் ஆரம்பகட்ட தோல்வியினால் பெரும்பாலும் 80 விழுக்காடு நபர்கள் முயற்சிகளை கைவிட்டு விடுகிறார்கள். சிலரால் எவ்வளவு முயற்சித்தும் பலன் இல்லை என்றால், அதற்கான காரணத்தை கண்டறிந்து, நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கும். எனவே தங்களுடைய தொடர்ச்சியான செயல்பாடுகளின் மூலமாக, அதனுடைய நுட்பங்களோடு ஒரு செயலில் தனித்துவம் பெற்றால் அதுவே திறமையாகும்.

மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கான முக்கிய காரணம், வாழ்வில் சிறந்த ஒரு வேலைக்குச் சென்று நல்ல பொருள் ஈட்டுவது. அதன் மூலமாக தன்னையும், தன்,குடும்பத்தையும் நன்றாக வைத்துக் கொள்வது. அந்த பொருள் ஈட்டுவது அறம் மற்றும் ஒழுக்கம் சார்ந்து இருக்க வேண்டும். எனவே, கல்வியறிவோடு தனக்கென்று உள்ள தனித்திறமைகளை கண்டறிந்து, அந்த திறமையை தொடர்ந்து வளர்த்தெடுத்து, வாழ்வில் வெற்றி வேண்டும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர்(மா.ஊ.வ.மு)தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News