சிவகாசி மாநகராட்சிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவேண்டும்: காங்கிரஸ் எம்பி கோரிக்கை
சிவகாசி மாநகராட்சிக்கு, மத்திய அரசு நிதி வழங்க பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என எம்.பி. மாணிக்கம்தாகூர் பேட்டி;
சிவகாசி மாநகராட்சிக்கு, மத்திய அரசு நிதி வழங்க வலியுறுத்தி பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்றார் விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம்தாகூர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி துாய்மை இந்தியா சார்பாக எனது குப்பை எனது பொறுப்பு எனது நகரம் எனது பெருமை என்ற தலைப்பில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர், சிவகாசி எம்எல்ஏ அசோகன், மேயர் சங்கீதா இன்பம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: சிவகாசி நகராட்சியாக இருந்த போதும் மத்திய அரசு புறக்கணித்தது. இப்போது சிவகாசி மாநகராட்சியாக ஆனபோதும் தொடர்ந்து மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. சிவகாசி மாநகராட்சிக்கு மத்திய அரசு இதுவரை ஒரு பைசா கூட நிதி அளிக்கவில்லை. இதற்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.
சிவகாசி - சாட்சியாபும், சிவகாசி - திருத்தங்கல் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கு முடிந்தவுடன் மேம்பாலம் கட்டும் பணிகள் விரைவாக நடைபெறும். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கொல்லம் ரயில் இயங்காமல் இருந்தது. தற்போது ரயில் இயக்கப்படுகிறது. ஆனால் கொல்லம் விரைவு ரயில், சிவகாசி ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்கிறது. இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
செப்டம்பர் மாதம் 21ம் தேதியிலிருந்து கொல்லம் விரைவு ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரயில்வேத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. சொன்னபடி செப்டம்பர் மாதம் 21ம் தேதி ரயில் நிற்காமல் சென்றால், மறுநாள் என் தலைமையில் சிவகாசி எம்எல்ஏ, சிவகாசி மேயர் மற்றும் பொதுமக்ளுடன் இணைந்து ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் எம்.பிமாணிக்கம்தாகூர் கூறினார். நிகழ்ச்சியில் துணை மேயர் விக்னேஷ்பிரியா, ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.