சிவகாசியில் சொத்து வரியைத் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து, பாஜக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சொத்துவரி உயர்வை கண்டித்து சிவகாசி பேருந்து நிலையம் முன்பு பாஜக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர்கள் ராதாகிருஷ்ணன், கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில துணை தலைவர் மகாலட்சுமி கலந்துகொண்டு பேசினார்.
அவர் பேசும்போது, தமிழக மக்களுக்கு விடியல் தரப்போகிறோம் என்று பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, இருளான ஆட்சியை வழங்கிக்கொண்டு இருக்கிறது திமுக ஆட்சி. தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், இந்த அரசு மக்களை ஏமாற்றி வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கிய தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி விட்டனர். பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய மடிக்கணினியை முடக்கி விட்டனர். அம்மா மினி கிளினிக்கை மூடிவிட்டனர். இது போல, கடந்த ஆட்சி வழங்கிய நல்ல திட்டங்களை எல்லாம் முடக்கிவிட்டனர்.
தங்கநகை கடனை எல்லாம் தள்ளுபடி செய்வோம் என்று கூறிய திமுக கட்சி, இப்போது 5 பவுனுக்கு கீழாக நகையை வைத்து கடன் வாங்கியவர்களுக்கு மட்டுமே தள்ளுபடி என்று அதிலும் மக்களை ஏமாற்றியுள்ளது.
ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்குள், குறிப்பாக நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் சொத்துவரி உயர்வு என்று திமுக அரசு அறிவித்துள்ளது. மக்களை பாதிக்கும் எந்த வரி உயர்வையும் அரசு செய்யக்கூடாது. மக்களை பாதிக்கும் சொத்துவரி உயர்வு அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
திமுக கட்சிக்கு ஏன் வாக்களித்தோம் என்று மக்கள் சிந்திக்க தொடங்கி விட்டனர். விடியாத அரசை நடத்தி வரும் திமுக ஆட்சிக்கு, மக்கள் விரைவில் தக்க பதிலை வழங்குவார்கள் என்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து பாஜக கட்சியினர் கண்டன முழக்கமிட்டனர்.
நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட பார்வையாளர் அன்புராஜ், கிழக்கு மாவட்ட பார்வையாளர் பார்த்தசாரதி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.