சிவகாசியில் நான்கு ரத வீதிகளின் சாலைகளை செப்பனிட பாஜகவினர் கோரிக்கை

சாலைகள் சீரமைக்கப்படாவிட்டால் தேரோட்டம் நிகழ்ச்சியை நடத்துவது வெகுவாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது

Update: 2023-03-26 18:15 GMT

சிவகாசியில் நான்கு ரத வீதிகளில், சாலை மராமத்து செய்யக் கோரி பாஜக சார்பில்  மேயரிடம் மனு அளித்த நிர்வாகிகள்

சிவகாசியின் நான்கு ரத வீதிகளின் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டுமென மாநகராட்சி மேயரிடம், பாஜகவினர்   கோரிக்கை மனு அளித்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள, பிரசித்தி பெற்ற ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா விரைவில் துவங்க இருக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனிப் பொங்கல் தேரோட்டம் நிகழ்ச்சி, வரும் ஏப்ரல் மாதம் 12ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர் சுற்றி வர இருக்கும், நான்கு ரத வீதிகளிலும் கழிவுநீர் வடிகால் கட்டும் பணிகள், குடிநீர் குழாய் இணைப்பு பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டு சாலைகள் முழுவதும் குண்டும், குழியுமாக மாறிக் கிடக்கிறது.

இதனால் 4 ரதவீதிகளிலும் நடந்து செல்பவர்கள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். காலையில் இருந்து, இரவு வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதிப்பு இருந்து வருகிறது.

பங்குனிப் பொங்கல் தேரோட்ட நிகழ்ச்சிக்கு இன்னும் 18 நாட்கள் மட்டுமே உள்ளது. சாலைகள் சீரமைக்கப்படாவிட்டால் தேரோட்டம்  நிகழ்ச்சியை நடத்துவது வெகுவாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, 4 ரத வீதிகளின் சாலைகளை தாமதமின்றி  துரிதமாக  சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதனிடையே பாரதிய ஜனதா கட்சியின் விருதுநகர் மாவட்ட (அரசு தொடர்பு பிரிவு) தலைவர் ஜெயக்கொடி தலைமையில் பாஜக கட்சியினர், மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பத்தை நேரில் சந்தித்து, தேரோட்டத்திற்கு முன்னதாக ரத வீதிகளின் சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். விரைவில் ரத வீதிகளின் சாலைகள் முழுமையாக சீரமைக்கப்படும் என்று மேயர் சங்கீதா இன்பம் உறுதியளித்தார்.

Tags:    

Similar News