சிவகாசியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

சிவகாசியில் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல், மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை

Update: 2022-07-27 14:16 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், நெகிழி பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் உபயோகம் அதிகம் இருப்பதாக மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்திக்கு ஏராளமான புகார்கள் வந்தது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்குமாறு மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.

அதன் பேரில் சிவகாசி மாரியம்மன் கோவில் அருகேயுள்ள நோட்டு புத்தகம் விற்பனை செய்யும் கடையின் குடோனில், சுகாதாரத்துறை அதிகாரிகள் பாண்டியராஜ், முத்துப்பாண்டி, சுகாதாரத்துறை மேற்பார்வையார் முத்துராஜ் மற்றும் அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர்.

கடைக்கு அடுத்து ஒரு வாடகை வீட்டை குடோனாக பயன்படுத்தி ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். இந்த குடோனிலிருந்து சுமார் ஆயிரத்து 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர் சந்திரசேகருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் ஜவுளி கடை வீதியில் ரவீந்திரன் என்பவருக்கு சொந்தமான ஸ்டேசனரி கடையில், சுமார் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த ரவீந்திரனுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

அதிகாரிகளின் அதிரடி சோதனையில் 2 இடங்களிலிருந்து மட்டும் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகளின் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News