காரியாபட்டி அருகே பனைமரம் நடுவது குறித்து விழிப்புணர்வு முகாம்
நாம் பயன்படுத்தும் காகிதத்தின் ஆயுட்காலம் நுாறு ஆண்டுகள். பனை ஓலையின் ஆயுட்காலமோ 400 ஆண்டுகள் ஆகும்;
விருதுநகர் மாவட்டம்,காரியாபட்டியில் பனைமரங்கள் வளர்ப்பு குறித்த பிரச்சார முகாம் நடை பெற்றது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கிரீன் பவுண்டேசன் சார்பாக காரியாபட்டி ஒன்றியத்தில், உள்ள கிராமங்கள் தோறும் பனை விதைகள் நடும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தின் பாரம்பரிய மிக்க பனைமரங்க அழிந்துவரும் சூழ்நிலை உருவாகி வருகிறது அழிந்து வரும் பனைமரங்களை காப்பாற்ற வேண்டும் என்றும் . கண்மாய், குளம், ஏரி, ஊருணி மற்றும் சாலை ஓரங்களில் பனைமரங்கள் வளர்க்க வேண்டும் என்பதை பள்ளி மாணவர்களிடம் விழுப்பினர் ஏற்படுத்த பிரச்சாரம் செய்யப் பட்டு வருகிறது அந்த வகையில், காரியாபட்டி பிசிண்டி கிராமத்தில் மாணவர்கள் பனை விதைகள் வழங்கப்பட்டு தினமும் விதைகள் நட்டு வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. கிரீன் பவுண்டேசன் நிர்வாகி பொன்ராம், சிலம்பாட்ட ஆசிரியர் அபிமன்யூ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பனைமரத்தின் சிறப்புகள் :ப னைமரம் தமிழர்களின் அடையாளம். பனையின் வேர் முதல் நுனி வரை பயன் தருகிறது. எனவே இதற்கு ‘கற்பகதரு’ என்று பெயர். இதில் 801 பயன்பாட்டு பொருட்கள் இருப்பதாக ‘தாலவிலாசம்’ என்ற நுால் கூறுகிறது. பனைமரம் பல்லுயிர்களின் வாழ்விடமாக உள்ளது.
நாம் பயன்படுத்தும் காகிதத்தின் ஆயுட்காலம் நுாறு ஆண்டுகள். பனை ஓலையின் ஆயுட்காலமோ 400 ஆண்டுகள். பண்டைய கால இலக்கியங்கள் எல்லாம் ஓலைச் சுவடியில் எழுதப்பட்டன.வறட்சியான பகுதியில் குறிப்பாக துாத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டத்தில் அதிகளவில் பனை மரங்கள் வளர்கின்றன.
மரம் ஒன்று பலன் ஏராளம்
ஒரு மரத்தில் ஒரு ஆண்டுக்கு நான்கு புது ஓலைகள் வளரும். நான்கு பழைய ஓலைகள் கீழே விழும். ஆறு முதல் 12 பாளைகள் தள்ளும். 100 முதல் 120 பனம் பழங்கள் காய்க்கும்.சராசரியாக ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு பனை சீசனில் 150 லிட்டர் பதநீர் கிடைக்கும்.நுங்கு 8 முதல் 10 குலைகள் இருக்கும். ஒரு குலையில் சராசரியாக 20 பனங்காய்கள் இருக்கும். நுங்கு வெட்டாவிடில் பனம் பழமாக பழுத்து கீழே விழும்.நான்கு மாதத்தில் பனங் கிழங்குகள் கிடைக்கும். ஒரு பனை மரத்தில் இருந்து ஆண்டுக்கு 5,000 முதல் 6,500 ரூபாய் வரை வருமானம் உண்டு. ஏப்ரல் – அக்டோபர் வரை ஆறு மாதங்கள் பனை சீசன் காலங்கள். மார்ச் கடைசியில் பாளை விழும்.
கம்போடியா நாட்டில் அதிகளவில் பனை மரங்கள் காணப்படுகின்றன. எங்கு திரும்பினாலும் பனை மரங்களும், பனை ஓலையால் செய்யப்பட்ட கைவினை பொருட்களை காண முடியும். கம்போடியா நாட்டு மக்கள் பனை மரத்தை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்கள்.
நாம் மறந்த, பனை மரத்தை அதன் பெருமை கருதி ஆசை, ஆசையாய் வளர்த்து வருகிறார்கள். எனவேதான் தற்போது தமிழகம் முழுவதும் பனைவிதைப்பந்துகள் மூலம் பனைமரங்கள் நடவும் செய்யும் பணிகளை முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சாலை ஓரங்கள், கண்மாய்க்கரை ஓரங்களில் அதிகளவில் பனை மரங்களை நட்டு மண்ணரிப்பை தடுக்க முடியும்.