சிவகாசி அருகே தீ விபத்து சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதம்

தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்

Update: 2023-02-02 09:30 GMT

சிவகாசியில்  உள்ள மின்சாதனப் பொருள்கள் விற்பனை கடையில் நேரிட்ட தீவிபத்தை கட்டுப்படுத்த போராடிய தீயணைப்பு வீரர்கள்

சிவகாசியில், மின்சாதனப் பொருட்கள் விற்பனை கடையில்  நேரிட்ட  தீ விபத்தில் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், திருவில்லிபுத்தூர் சாலையில் சிவகாசி மணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி அருணாச்சலம் (50). இவர் மின்சாதனப் பொருட்கள் மொத்தமாக விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார்.   இவரது கடையில் நேற்று நள்ளிரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இரண்டு தளங்களை கொண்ட பெரிய அளவிலான இந்த மின்சாதன விற்பனை கடையில் மின்சாரப் பொருட்கள், மின்விசிறி, மின்சார அடுப்பு, பல வகைகளிலான பல்புகள், வயர்கள், மின் மோட்டார்கள், பிளாஸ்டிக் பைப்புகள் உள்ளிட்ட அனைத்து வகை மின்சாதானப் பொருட்களும் கடையின் மேல்தளத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. கீழ்த்தளத்திலும் ஏராளமான பொருட்கள் இருந்தன. நேற்று இரவு வியாபாரம் முடித்துவிட்டு கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர்.

இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் மின்சாதன விற்பனைக் கடைக்குள் தீப்பிடித்து எரியத் துவங்கியது. அந்த வழியாகச் சென்றவர்கள் இது குறித்து சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சாத்தூர், திருவில்லிபுத்தூர், வெம்பக்கோட்டை பகுதியில் இருந்து கூடுதலாக 6 தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.

நள்ளிரவில் இருந்து, இன்று அதிகாலை வரை தீயணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. இந்த பயங்கர திடீர் தீ விபத்தில் கடையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான மின்சாதனப் பொருட்கள் அனைத்தும் முற்றிலும் தீயில் எரிந்து சேதமாகியுள்ளது. விபத்து குறித்து சிவகாசி நகர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News