வீரசோழனில் கிடா முட்டும் போட்டி திடீர் ரத்து: தமிழக முதல்வரிடம் முறையிட முடிவு

வீரசோழனில் கிடா முட்டும் போட்டிக்கு அனுமதி அளிக்காததால் தமிழக முதல்வரிடம் முறையிட விழாக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

Update: 2023-01-23 08:49 GMT

போட்டிக்கு தயாராகியிருந்த ஆட்டுக் கிடா.

விருதுநகர் அருகே, வீரசோழனில், கிடா முட்டும் நிகழ்ச்சி திடீர் ரத்தானதால் வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே வீர சோழன் மற்றும் மதுரை தெற்குவாசல் கிடா முட்டும் நண்பர்கள் குழு சார்பாக ஆண்டுதோறும் பொங்கல் தினத்தை முன்னிட்டு, கிடா முட்டும் விளையாட்டு நிகழ்ச்சி நடைபெறும் .இந்த ஆண்டு வழக்கம்போல, கிடா முட்டும் நிகழ்ச்சி நேற்று 21ந் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி, மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, செங்கோட்டை, விருதுநகர் நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து 200 க்கு மேற்பட்ட கிடாய்கள் களத்தில் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையில், திடீரென்று ,காலை 10 மணியளவில் கிடா முட்டும் விளையாட்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், கிடாய்களுடன் வந்த வீரர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர். இது குறித்து,

இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் பசீர் அகமது செய்தியாளர்களிடம் பேசுகையில்,  தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, சர்வமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கிடா முட்டும் வீர விளையாட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தோம். இதற்கு முறையாக கடந்த டிசம்பர் மாதம் 9ந் தேதி சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரியிருந்தோம். ஆனால், திடீரென்று, அரசிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை.

கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திய நிகழ்ச்சி ரத்தானதால், இப்பகுதி மக்கள் மிகவும் வருத்தத்துடன் இருக்கிறார்கள். நீதிமன்ற அனுமதி பெற்று இன்னும் சில நாட்களில் கிடா முட்டும் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்படும். மேலும் , நிகழ்ச்சி குறித்து தமிழக முதல்வரின் நேரில் கவனத்துக்கு எடுத்து செல்வேன் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News