அருப்புக்கோட்டை அருகே சாலை விபத்து: அதிமுக கட்சி பிரமுகர் பரிதாமாக உயிரிழந்தார்
விருதுநகர் மாவட்டம் சொக்கலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வீரசுப்பிரமணியன். இவருடைய மகன் விஜயகுமார் (40). விஜயகுமார், அதிமுக கட்சியில் விருதுநகர் மாவட்ட கலை பிரிவு செயலாளராக இருந்து வந்தார்.
விஜயகுமார் தனது இருசக்கர வாகனத்தில் காந்தி நகர் பகுதியிலிருந்து, சர்வீஸ் சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, மதுரையில் இருந்து அருப்புக்கோட்டைக்கு சென்ற கார், விஜயகுமாரின் இருசக்கர வாகனத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட விஜயகுமார், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவலறிந்த அருப்புக்கோட்டை நகர் காவல்நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விஜயகுமார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து, போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.