நரிக்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையாளரைக் கண்டித்து போராட்டம்

கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்த நிலையில் யூனியன் கூட்டம் ரத்து செய்யப் படுவதாக தகவல் பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது;

Update: 2022-08-30 08:45 GMT

நரிக்குடி யூனியன் கூட்டத்தை ரத்து செய்த, வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து யூனியன் தலைவர், கவுன்சிலர்கள் போராட்டம்

நரிக்குடி யூனியன் கூட்டத்தை ரத்து செய்த, வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து யூனியன் தலைவர், கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள நரிக்குடி யூனியனில் 14 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். இந்த நிலையில் 3 கவுன்சிலர்கள் தொடர்ந்து மூன்று கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. இதனையடுத்து கூட்டத்தில் கலந்து கொள்ளாத கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.

நேற்று யூனியன் கூட்டம் நடைபெறும் என்று, கடந்த 15 நாட்களுக்கு முன்பாகவே கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, யூனியன் தலைவர் பஞ்சவர்ணம் தபால் அனுப்பியுள்ளார். மேலும் கூட்டத்தில் கலந்து கொள்ளாத கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதால், அதனால் ஏதேனும் பிரச்னை ஏற்படக்கூடும் என்று கருதிய தலைவர் பஞ்சவர்ணம், துணைத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் நரிக்குடி காவல் நிலையத்தில், யூனியன் கூட்டத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி மனு கொடுத்தனர்.

கூட்டம் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், நரிக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் பிரின்ஸ், யூனியன் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அலுவலக தகவல் பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. யூனியன் தலைவர், துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் வந்த போதும் கூட்ட அரங்கம் திறக்கப்படவில்லை.

இதனை கண்டித்து தலைவர் பஞ்சவர்ணம், துணைத் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் கவுன்சிலர்கள் 3 பேர் உள்ளிட்ட 5 பேரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கவுன்சிலர்களுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து போராட்டத்தை  கைவிட்டு  அனைவரும் கலைந்து சென்றனர். பதற்றமான சூழ்நிலை இருந்து வருவதால், நரிக்குடி யூனியன் அலுவலகப் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News