விருதுநகர் அருகே தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர் அருகே தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.;

Update: 2023-10-08 08:20 GMT

விருதுநகர் அருகே தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சௌடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் நடத்தப்பட்ட சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர்  ஜெயசீலன்,இ.ஆ துவக்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:

தனியார் நிறுவனங்களில் படித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் வேலை வாய்ப்பை பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது.

சிவகாசியில் அகில இந்திய அளவிலான நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய அச்சு தொழில்நுட்பங்கள் குறித்து தெரிந்து பயன் பெறும் வகையில் அச்சு கண்காட்சி நடைபெற்று வருகிறது. சிவகாசி நகரமானது சுமார் 8 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் சுமார் 5000க்கும் மேற்பட்ட அச்சு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.

சிவகாசியை ஒட்டி அமைந்துள்ள வெம்பக்கோட்டை வட்டாரம் மற்றும் சிவகாசி வட்டாரத்தில் சுமார் 1500 பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களாக 5000 நிறுவனங்கள் இயங்கி வருகிறது. மேலும்; பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டக்கூடிய பெரிய நிறுவனங்களும் இயங்கி வருகிறது.

இந்த கண்காட்சியில், பங்குபெற்ற நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்கள் வேலை நாடுபவர்கள் நிறைய பேர் இருந்தாலும், அந்த வேலையை செய்வதற்கு தேவையான தகுதிகள் பெரும்பாலானவர்களுக்கு இல்லாமல் இருக்கிறது என்கின்றனர்.

அதுபோல, உலக அளவில் வேலை வாய்ப்பின்மை குறித்து ஆய்வு செய்யக்கூடிய ஐக்கிய நாடுகள் சபைகளின் கீழ் இயங்கி வரக்கூடிய பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு உலகம் முழுவதும் தற்போது இருக்கக்கூடிய வேலைவாய்ப்பு சந்தையை ஆய்வு செய்து, சில அறிக்கைகளை கூறுகிறது.

அதில் இன்று உலகின் மிகப்பெரிய பிரச்சனை வேலை வாய்ப்பு இன்மை அல்ல. அதைவிட முக்கிய பிரச்சினையாக இருப்பது வேலை நாடுபவர்களுக்கு வேலைக்கு தேவையான தகுதிகள் இல்லை என்பது தான் என்கிறது.

நவீன தொழில்கள் தரவு அறிவியல், மென்பொருள், விருந்தோம்பல் துறை என்று சொல்லக்கூடிய ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் என, பல்வேறு வேலை வாய்ப்பு உள்ள துறைகள் உள்ளன. பல ஆயிரம் கோடிகள் அதில் ஒவ்வொரு வருடமும் வருமானம் கிடைக்கிறது.

பெரும்பாலான மாணவர்கள், இளைஞர்களுக்கு தேடுதல் இல்லை. ஒரு சௌகரியமான வாழ்க்கைக்குள் இருந்து விடுகிறார்கள். இன்று உலகில் இருக்கக்கூடிய நிறைய தொழில் நுட்பங்களில் பல்வேறு வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. எந்த ஒரு வெற்றியை பெறுவதற்கும் கடின உழைப்பு தான் காரணம்.

எனவே, நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த வாய்ப்புகளை தேடுவதில் தேடும் நபர்கள் மிக குறைவாக இருக்கின்றனர். தங்களுடைய சௌகரியமான தற்போது வாழ்க்கையில் இருந்து வெளியில் வந்து முயற்சிகள் செய்வதற்கான நபர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும் முன்னேறுவதற்கும் பல வழிகள் இருக்கின்றன.

அதை மிக எளிமையான வழி கல்வியும் புதிதாக கற்றுக் கொள்வதும் தொடர்ச்சியான உழைப்பதும் தான். அதை நீங்கள் செய்தீர்கள் என்றால், இன்றைய பணியாளர்கள் நாளை ஒரு நிறுவனத்தின் உரிமையாளர்களாக கூட மாற முடியும்.

அதற்கு நாம் வாழும் இந்த காலகட்டத்திலேயே பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. எந்த எடுத்துக்காட்டுகளை பின்பற்றி எப்படி உழைக்கின்றோம் என்பதுதான், அடுத்த 10, 20 ஆண்டுகளில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், உங்கள் குடும்பத்தின் பொருளாதாரம் எங்கே இருக்கிறது, உங்களுடைய சமூக அந்தஸ்து எங்கே இருக்கிறது என்பதை தீர்மானிப்பதற்கான வாய்ப்பினை உருவாக்கிய வேண்டியது நம்முடைய கைகளில் இருக்கிறது என தெரிவித்தார்.

திட்ட இயக்குநர்(மா.ஊ.வ.மு) மரு.தண்டபாணி, திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) .பேச்சியம்மாள், வட்டாட்சியர், அரசு அலுவலர்கள், கல்லூரி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News