போலீஸாரிடமிருந்து தப்பிய கைதி நீதிமன்றத்தில் சரண்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டிய கைதி தப்பியோடிய சம்பவம் போலீசாரிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.;
பைல் படம்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள கல்லூரணி பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (59). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (50) என்பவருக்கும் இடத்தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்திக்கு ஆதரவாக அவரது உறவினர் தங்கப்பாண்டியன் பேசினார். சுமூக உடன்பாடு ஏற்படாத நிலையில், வேல்முருகன் வீட்டின் முன்பு இருந்த தேக்கு மரத்தை தங்கப்பாண்டியன் வெட்டியுள்ளார். இதனை தடுக்க வந்த வேல்முருகனின் மனைவி மகாலட்சுமியை அரிவாளைக் காட்டி மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து வேல்முருகன், எம்.ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். வழக்குபதிவு செய்த போலீசார், நேற்று தங்கப்பாண்டியனை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக போலீசார் அழைத்துச் சென்றனர். நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் அந்தப் பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு, போலீசார் தங்கப்பாண்டியனுடன் சென்றனர்.
அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, போலீசாரை ஏமாற்றிவிட்டு தங்கப்பாண்டியன் தப்பி ஓடிவிட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டிய கைதி தப்பியோடிய சம்பவம் போலீசாரிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அருப்புக்கோட்டை சரகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசாரிடமிருந்து தப்பியோடிய கைதி தங்கப்பாண்டியனை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசாரிடமிருந்து தப்பியோடிய கைதி தங்கப்பாண்டியன், அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இந்த சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.