அருப்புக்கோட்டை அருகே நர்சிங் மாணவிக்கு ஆபாச விடியோ : கல்லூரி நிர்வாகி கைது
Porn video of a nursing student near Aruppukkottai: College administrator arrested
அருப்புக்கோட்டையில் நர்சிங் கல்லூரி மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பியதாக புகாரின்பேரில் கல்லூரிதலைவர் கைது செய்யப்பட்டா்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் நர்சிங் கல்லூரி மற்றும் கேட்டரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளின் தலைவராக தாஸ்வின் ஜான்கிரேஸ் (38) இருந்து வருகிறார். இவர் ஒரு அரசியல் கட்சியின் விருதுநகர் கிழக்கு மாவட்ட சிறுபான்மையினர் தலைவராகவும் பொறுப்பில் உள்ளார். இவரது கல்லூரியில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
தாஸ்வின் ஜான்கிரேஸ், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தனது கல்லூரியில் படித்துவரும் மாணவி ஒருவரிடம் செல்போன் வீடியோ காலில் ஆபாசமாக பேசியிருக்கிறார். தற்போது அந்த ஆபாச வீடியோ கல்லூரி மாணவிகளின் செல்போனுக்கு பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள், பெற்றோர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். ஆபாச வீடியோ வெளியானதை தொடர்ந்து நேற்று கல்லூரி திறக்கப்படவில்லை.
இதனால் கல்லூரிக்கு வந்த மாணவிகள் தங்களது படிப்பு மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று கூறி, தங்களது சான்றிதழ்கள் மற்றும் கல்லூரி கட்டணத்தை திரும்ப வழங்கக்கோரி பழைய பேருந்து சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வட்டாட்சியர் அறிவழகன், அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் சகாயஜோஸ் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
இதனை ஏற்று மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி, அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், வன்கொடுமை தடுப்புச்சட்டம், ஆபாச குறுஞ்செய்தி அனுப்புதல் பிரிவின் கீழ் கல்லூரி தலைவர் தாஸ்வின் ஜான்கிரேஸை கைது செய்தனர். இந்த சம்பவம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.