காரியாபட்டி அருகே, அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம் நடந்தது.
காரியாபட்டி:
திருச்சுழி அருகே, அருள்மிகு ஸ்ரீ சிவ செண்பக தண்ணாயிரமுடைய அய்யனார் திருக்கோயில் ராஜகோபுர மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே எழுவணி கிராமத்தில் உள்ள அருள்மிகு சிவசெண்பக தண்ணாயிரமுடைய அய்யனார் திருக்கோவில், ராஜகோபுரம் மற்றும் 21 பந்தி 61 சேனை பரிவார தெய்வங்களுக்கும், கும்பாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
மங்கல இசை, ஸ்ரீ ஹரித்ர கணபதி பூஜை, தேவதா அனுக்ஞை, மகா கணபதி ஹோமம், கோமாதா பூஜை, ஸ்ரீ கருடஹோமம், தூபதீப ஆராதனை, புஷ்பாஞ்சலி போன்ற இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்று, கடம் புறப்பட்டு புனித நீரை கும்பத்தில் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, புனித நீரை பக்தர்களுக்கு தெளித்தனர். பின்னர், சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழாவில், எழுவணி, முக்குளம், ஆலாத்தூர், ஓடாத்தூர், மதுரை, அருப்புக்கோட்டை, நரிக்குடி போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.