லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் ஊழல்தடுப்பு பிரிவினரால் கைது
அருப்புக்கோட்டை அருகே 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பு ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்;
அருப்புக்கோட்டை அருகே 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பு ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள எம்.ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணி புரிந்து வருபவர் ராமநாதன் (30). ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள ராமசாமிபட்டி பகுதியைச் சேர்ந்த தங்கமணி என்பவர் அடிதடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்துள்ளார். அவர் தினமும் எம்.ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார்.
இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட தங்கமணி, கடந்த 10 நாட்களாக காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. இதனையறிந்த சார்பு ஆய்வாளர் ராமநாதன், தங்கமணி குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப் போவதாக மிரட்டியுள்ளார். மேலும் அறிக்கை தாக்கல் செய்யாமல் இருக்கவும், வழக்கிலிருந்து விடுவிக்கவும், தங்கமணியிடம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இதனை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தங்கமணி தெரிவித்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாய் பணத்தை தங்கமணியிடம் கொடுத்தனர். அதனை எம்.ரெட்டியபட்டி காவல் நிலையத்தில், சார்பு ஆய்வாளர் ராமநாதனிடம் தங்கமணி கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பு ஆய்வாளர் ராமநாதனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.காவல் நிலையத்திற்குள் வைத்து லஞ்சம் வாங்கிய சார்பு ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.