காரியாபட்டியில் அங்காளபரமேஸ்வரி ஆலய குடமுழுக்கு விழா
திருச்சுழி அருகே, காரியாபட்டியில் அங்காளபரமேஸ்வரி ஆலய குடமுழுக்கு விழா நடைபெற்றது.;
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே பனையூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஸ்ரீ குருநாத சுவாமி ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பாலமுருகன் மற்றும் 21 பரிவார தெய்வங்களின் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மிக விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக, திருக்கோயில் ஆலய வளாகத்தினுள் மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, வேத பாராயணம், ருத்ர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை, கடம் புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் சுவாமி அம்பாள் சர்வ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இதனையடுத்து, கணபதி ஹோமத்துடன் தொடங்கிய யாகசாலை பூஜைகள் நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று முடிந்து குடங்களில் எடுத்துச் செல்லப்பட்ட புனித நீர் விமான கலசங்கள் மற்றும் சுவாமி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.
பின்னர், வெகு விமர்சையாக நடைபெற்ற மாபெரும் அன்னதானத்தில் பக்தர்கள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டு அன்னதான விருந்தில் பசியாறினர்.
மேலும், இந்த மஹா கும்பாபிஷேக விழா நிகழ்ச்சியில் , உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்தனர்.