திருவண்ணாமலை மாவட்டத்தில் மதுவிலக்கு காவல்துறையினர் அதிரடி சோதனை

தண்டராம்பட்டு அருகில் தட்டரனை கிராமத்தில் 800 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 15 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர்.

Update: 2024-06-21 12:32 GMT

கள்ளச்சாராய சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த பரப்பரப்பான நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கத்துறை டிஎஸ்பி ரமேஷ் ராஜ் தலைமையில் ஆய்வாளர் ஜனார்த்தனன் உள்ளிட்ட போலீசார் தண்டராம்பட்டு அருகில் தட்டரனை கிராமத்தில் 800 லிட்டர் சாராய ஊரல் மற்றும் விற்பதற்காக தயார் நிலையில் இருந்த 15 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர்.

இது தொடர்பாக மணிகண்டன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர் மேலும் திருவண்ணாமலை அடுத்த கெடக்கந்தாங்கள் பகுதியில் சாராயம் விற்றுக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த குமாரி என்பவரையும் கைது செய்து 15 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர்.

மேலும் இவருடைய மகன் உதயகுமார் என்பவர் தலைமறைவாகியுள்ளார் அவரையும் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் சோதனைகள் தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

கல்வராயன் மலை பகுதிகளில் சோதனை

கள்ளச்சாராயம் அதிகளவில் புழக்கம் உள்ளதாக கூறப்படும் கல்வராயன் மலை பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை கொண்டனர்.

மலைகளும் குன்றுகளும் இயற்கை வளங்களும் உள்ள ஒரு அற்புதமான இடம் தான் இந்த கல்வராயன் மலை. இந்த மலை கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி தான் கல்வராயன் மலைப்பகுதிகள். மிக ரம்யமாக மிக அழகாக குன்றுகளுடன் இயற்கை வளங்களோடு காட்சி தரும் அற்புதமான மலை கல்வராயன் மலை.

ஆனால் அது தற்போது வட மாவட்டங்களுக்கான கள்ளச்சாராயம் உற்பத்தி செய்யப்படும் பிரதான மையமாகவும் போலி மதுபான ஆலைகள் செயல்படும் பிரதேசமாகவும் சமூக விரோதிகளால் உருமாற்றப்பட்டுள்ளது.

இந்த கல்வராயன் மலை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தான் உள்ளது.  கல்வராயன் மலையில் 15 ஊராட்சிகள் 118 கிராமங்கள் அடங்கியுள்ளன. இந்த கல்வராயன் மலைகளில் ஒரு மலை கிராமமும் இன்னொரு மலை கிராமத்துடன் மண்சாலைகளால் மட்டுமே இன்றும் இணைக்கப்பட்டு இருக்கும் . எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாத , அரசுகளால் கைவிடப்பட்ட பிரதேசம் என்றும் இப்பகுதியை கூறலாம். ஒரு சூனியப்பிரதேசம் போல் தான் இந்த கல்வராயன் மலை இருக்கின்றன.

இந்த கல்வராயன் மலை. சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை இணைக்கும் அடர் வனப்பகுதியாக உள்ளது.

இந்த மலையில் மரவள்ளி கிழங்குகள் பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் வாழும் மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வறுமையை வேலை வாய்ப்பின்மையை சமூக விரோதிகள் முழு வீச்சில் பயன்படுத்துகின்றனர்.

கல்வராயன் மலையில் உள்ள நீரோடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் கள்ளச்சாராயம் உற்பத்தி செய்து பல்வேறு இடங்களில் விற்பனை செய்து வருகின்றனர். சமூக விரோதிகள் அதிகமாக இங்கு இருப்பதால் சாதாரண பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் யாரும் இங்கு வர அச்சப்படுகின்றனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்திற்கு அடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் நான்கு குழுக்களாக பிரிந்து கல்வராயன் மலையில் தீவிரமாக கள்ளச்சாராய சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கல்வராயன் மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள மாயம்பாடி, வட்டப்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளச்சாராய சாவுகள் நிகழும் போதெல்லாம் சோதனை செய்யாமல் அடிக்கடி இப்பகுதியில் போலீசார் சோதனை நடத்த வேண்டும் , இயற்கையின் பெரு வளமான கல்வராயன் மலையை காப்பாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள்,இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News