கள்ளக்குறிச்சி சம்பவத்தில், திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து, திருவண்ணாமலையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-24 11:23 GMT

திருவண்ணாமலையில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்து 55க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்னும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை கண்டித்தும், இதை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று (24ம் தேதி) தமிழகம் முழுவதும் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்

அதன்படி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்,

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர், போளூர் சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

கண்டன உரையில் கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்தும், சிபிஐ விசாரணை கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டம் அப்பாவி மக்களுக்கான ஆர்ப்பாட்டம், திமுக ஆட்சியில் கஞ்சா விற்பனை கள்ள சாராய விற்பனை தற்போது அதிகரித்துள்ளது.

இந்த கள்ளச்சாராய விற்பனையில் பின்னணி யார் என்பது வெளியில் வரவேண்டும், மெத்தனால் போன்ற மூலப் பொருட்கள் எங்கிருந்து வந்தது என விசாரிக்க வேண்டும், காவல்துறை மீது மட்டும் நடவடிக்கை இல்லாமல் காரணமானவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் படிப்பிற்கும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் தேவையான உதவிகளை செய்ய வேண்டும், மேலும் மக்களுக்கு ஆதரவான போராட்டங்களுக்கு திமுக அரசு அனுமதி அளிக்காததை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆரணி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பெருமாள் நகர் ராஜன், திருவண்ணாமலை நகர செயலாளர் செல்வம், மாவட்ட அவைத் தலைவர் நாராயணன், கிழக்கு,தெற்கு, வடக்கு, மத்திய, மாவட்ட கழக, நிர்வாகிகள், நகர ,ஒன்றிய ,பேரூராட்சி ,கழக செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News