உழைப்புக்கு ஊதியம்- பொங்கல் போனஸ் வழங்கக்கோரி தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்
பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் மடியேந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்;
பட்டுக்கோட்டை நகராட்சியில்பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்று கூறி 100க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகம் முன்பு மடியேந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சியில் சுய உதவிக்குழு மூலம் இயங்கி வரும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு, இதுநாள் வரை சம்பளம் தரவில்லை. மேலும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு EPF வருங்கால வைப்புத்தொகையையும் நகராட்சி நிர்வாகம் இதுநாள் வரை செலுத்தாமல் வஞ்சித்து வருகிறது. இதனால் தங்களுடைய உழைப்புக்கு ஊதியம் மற்றும் பொங்கல் போனஸ் வழங்க மறுக்கும் பட்டுக்கோட்டை நகராட்சியை கண்டித்து 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் மடியேந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்களது நியாயமான கோரிக்கையை ஏற்கும் வரை காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுப்போம் என தூய்மை பணியாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செல்வம் தெரிவித்தார்.