தீபாவளி முன்பணம் வழங்காததைக் கண்டித்து கிராம உதவியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
தீபாவளி முனபணம் வழங்கப்படாததால் 100 -க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்;
பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய வட்டார கிராம உதவியாளர்கள்
தீபாவளி முன்பணம் வழங்கப்படவில்லை என்று கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டாரப் பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் தீபாவளி முன்பணம் வழங்கப்படவில்லை என்று கூறி பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒவ்வொரு வருடமும், தீபாவளி முன்பணமாக ரூபாய் 10,000 வழங்கப்பட்டு அந்த பணத்தை ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1000 பிடித்தம் செய்து கொள்வது வழக்கமாக இருந்து வந்தது.
இந்நிலையில், இந்த வருடம் மற்ற வட்டார பகுதிகளில் உள்ள கிராம உதவியாளர்களுக்கு முன்பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், பட்டுக்கோட்டை வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராம உதவியாளர்களுக்கு மட்டும் முன் பணம் தர வருவாய்த்துறை அதிகாரிகள் மறுப்பதாக குற்றம்சாட்டி,, திடீரென பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் வட்டார கிராம உதவியாளர்கள் சங்க தலைவர் வெங்கடாஜலபதி தலைமையில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.