உக்ரைனில் தவிக்கும் மாணவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை
உக்ரைனில் தவிக்கும் மாணவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
உக்ரைன் நாடு மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனால் உக்ரைனில் மக்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். பலர் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சுரங்கப் பாதையில் தஞ்சமடைந்துள்ளனர். பலர் உணவு, தூக்கமின்றி தவித்து வருகின்றனர். உக்ரைனில் படித்து வரும் தமிழக மாணவ -மாணவிகள் சுமார் 5 ஆயிரம் பாதுகாப்பற்ற நிலையில் தவித்து வருகின்றனர்.
இதில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த 4 மாணவர்களும் அடங்குவர். அதிராம்பட்டினம் சுப்பிரமணியர் கோயில் தெருவை சேர்ந்த செல்வகுமார் மகன் நவீன் சூர்யா (21), சிவன் கோவில் தெருவை சேர்ந்த பாலு மகன் சஞ்சய்(21), ஜமால் முகமது மகன் முகமது ஹகம்(21) உள்பட 4 பேர் உக்ரைன் நாட்டில் உசோர்டு நகரில் உள்ள தேசியப் பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு மருத்துவப் படிப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் பல்கலைக்கழகத்துக்கு 2 வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல்கலைக்கழக விடுதியில் போருக்கு மத்தியில் நவீன், சூர்யா உள்ளிட்ட மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
இதனால் அவர்களது பெற்றோர் பரிதவித்து வருகிறார்கள். அடிக்கடி தங்களது மகன்களிடம் போன் செய்து, பார்த்து கவனமாக இருங்கள், மத்திய, மாநில அரசுகள் சிறப்பு விமானம் மூலம் மீட்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர். விரைவில் விமானம் மூலம் நீங்கள் தமிழகம் வந்து விடுவாய், பயப்படாமல் இருங்கள், முக்கியமாக பாதுகாப்பாக இருங்கள், தமிழக மாணவர்கள் அனைவரிடமும் பேசுங்கள் என்று ஆறுதல் கூறி வருகின்றனர். இதுகுறித்து மாணவன் நவீன்சூர்யாவின் தந்தை செல்வகுமார் கூறும்போது எனது மகன் மற்றும் அதிராம்பட்டினத்தை சேர்ந்த 4 பேர் உக்ரைனில் மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர். அவர்கள் தினமும் எங்களிடம் தொலைபேசியில் பேசி வருகின்றவர். அவர்கள் கூறுவதை பார்த்தால், அங்கு சூழ்நிலை சரியில்லாத நிலை தெரிகிறது.
அங்கு குண்டு மழைப்பொழிவுக்கு இடையே மாணவர்கள் சிக்கி தவிக்கின்றார்களாம். உக்ரைனில் நடக்கும் போர் சூழ்நிலை நினைத்தால் பெற்ற மனம் பதறுகிறது. அங்குள்ள மாணவர்களிடம் பணம் இல்லாமல் தவிக்கின்றனர். உணவுக்காக வெளியே கடைகளுக்கு செல்ல முடியாத நிலைதான் உள்ளதாம். இதனால் என்ன செய்வது என்றே தெரியவில்லை. அங்குள்ளவர்களுக்கு ஆறுதல் கூறுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. எனவே உடனடியாக மத்திய மாநில அரசுகள் தமிழக மாணவர்கள் மட்டுமன்றி இந்தியாவை சேர்ந்த அனைவரையும் பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் என்றார்.