அதிராம்பட்டினத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பற்றி எரிந்து சேதம்
பொதுமக்கள் வீடு தீப்பிடித்து விடுமோ என்ற அச்சத்தில் அலறியடித்து ஓடிச்சென்று அவரவர்கள் வீட்டின் மின்இணைப்பை துண்டித்தனர்;
அதிராம்பட்டினத்தில் திடீரென டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் பேரூராட்சியில் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள புதுப்பள்ளி அருகே டிரான்ஸ்பார்மரில் லேசான தீப்பொறி ஏற்பட்டது. பின்னர், சிறிது நேரத்தில் டிரான்ஸ் பார்மர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதுடன் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதனால் புகை மூட்டம் அந்த பகுதி முழுவதும் சூழ்ந்தது, இதைக்கண்ட பொதுமக்கள், தங்களது வீட்டிலும் தீ விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அலறியடித்து ஓடிச்சென்று அவரவர்கள் வீட்டிலுள்ள மின் இணைப்பைத் துண்டித்தனர்.
இதனால், அதிராம்பட்டினத்தில் அனைத்து பகுதியிலும், வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுபற்றி, தகவல் அறிந்த மின் வாரிய ஊழியர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து வந்து, மொத்தமாக மின் இணைப்பை துண்டித்து தீயை அணைத்தனர். மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். உடனடியாக மின் இணைப்பு துண்டித்து, தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.