மத்திய அரசின் விருதுக்கு தமிழகத்தில் தஞ்சாவூர் காவலர் தேர்வு

மத்திய அரசு சார்பில், வீர தீர செயல்களில் ஈடுபடும் போலீசாருக்கு வழங்கும், பிரதம மந்திரியின் உயிர்காக்கும் காவலர் விருதுக்காக தஞ்சாவூர் போலீசார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Update: 2021-07-05 14:00 GMT

காவலர் ராஜ்கண்ணன்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த தென்னமநாடு மேலதெருவை சேர்ந்தவர் ராஜகண்ணன்,35, இவர் கடந்த 2010ம் ஆண்டு போலீசில் பணிக்கு சேர்ந்துள்ளார். தஞ்சாவூர் ஆயுதப்படை பிரிவு காவலராக 10 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். தற்போது பட்டுக்கோட்டை நகர போலீஸ் ஸ்டேஷனின் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 2015ம் ஆண்டு, பணிக்காக காலையில், ஊரில் இருந்து தஞ்சாவூருக்கு ராஜ்கண்ணன் சென்றுள்ளார். அப்போது தஞ்சாவூர் ஆத்துபாலம் அருகே சென்ற போது, கல்லணை கால்வாய் ஆற்றில் சிறுவன் ஒருவன் தவறி விழுந்துள்ளான். அப்போது கரையில் வாக்கிங் சென்றவர்கள், தீயணைப்பு படையினருக்கு போன் செய்து கூட்டமாக நின்றுள்ளனர். இதை பார்த்த ராஜ்கண்ணன் உடனடியாக, ஆற்றில் குதித்து சுமார் 500 மீட்டர் வரை தண்ணீரில் அடித்து சென்று ஆற்றில் விழுந்த சிறுவனின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

இதையடுத்து ராஜ்கண்ணன் செயலை அறிந்த அப்போதைய போலீஸ் எஸ்.பி.,தர்மராஜ், கலெக்டர் சுப்பையனிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தமிழக அரசின் வீரதீர செயலுக்கான விருதுக்கு பரிந்துரை செய்த நிலையில், தமிழக அரசு சார்பில் மத்திய அரசின் விருதுக்கு பரிந்துரை செய்துள்ளனர். இந்நிலையில், 2018ம் ஆண்டுக்கான விருது கடந்த ஜூன் 30ம் தேதி அறிவிக்கப்பட்டதில், நாடு முழுவதும் 14 பேரில், தமிழகத்தில் இருந்து ராஜ்கண்ணன் மட்டுமே தேர்வு செய்யப்ட்டார்.

இதையடுத்து சக போலீசார் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ராஜ்கண்ணனின் மனைவி சரண்யா, ஒரத்தநாடு போலீஸ் ஸ்டேஷனில், முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். திவான்,5,தீரன்,2 என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இது குறித்து ராஜ்கண்ணன் கூறுகையில்; சிறுவன் ஆற்றில் விழுந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. ஆற்றில் தண்ணீர் அதிகளவில் சென்றதாலும், காலை நேரம் என்பதாலும் ஆற்றில் இறங்க தயக்கம் காட்டினர். ஆனால் உயிரை துட்சமாக நினைத்து ஆற்றில் குதித்து,போராடி சிறுவனை காப்பாற்றினேன். அதன் பிறகு பணிக்கு காலதாமாக சென்ற போது, எஸ்.பி., விசாரித்து என்னை பாராட்டினர். அதன் பிறகு விருதுக்கு பரிந்துரை செய்தனர். நாட்டிலேயே 14 பேர் விருது பெரும் நிலையில், அதில் நானும் ஒருவன் என்பது பெருமையாக உள்ளது என அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News