பட்டுக்கோட்டையில் ஆசிரியர் வீட்டில் கொள்ளை: சகோதரர்கள் கைது

பட்டுக்கோட்டையில் பட்டப்பகலில் ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்து சென்ற சகோதரர்கள் போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-28 11:00 GMT

கைது செய்யப்பட்ட இருவர்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பெருமாள்கோயில்தெரு தையலம்மை நகரை சேர்ந்த மறைந்த வழக்கறிஞர் பழனிவேலுவின் மனைவி ஸ்ரீ பிரியா (46). இவர் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் ஆசிரியை ஸ்ரீ பிரியா கடந்த 23ம் தேதி காலை வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றுவிட்டார். மாலை வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த சுமார் 40 பவுன் தங்க நகைகள், 2 வெள்ளிக்குத்துவிளக்குகள், 1 காமாட்சி விளக்கு, வெள்ளி தட்டு 1, வெள்ளி டம்ளர் 1 உள்ளிட்ட வெள்ளிப் பொருட்கள், பட்டுப்புடவைகள், ரூபாய் 2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

மேலும் இது குறித்து உதவித் தலைமை ஆசிரியை ஸ்ரீபிரியா பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இதனையடுத்து பட்டுக்கோட்டை பாளையம் பகுதியில் இன்று காலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார்  வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கி பிடித்து விசாரித்ததில், அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசினர்.

உடனே அவர்களை பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்திற்கு கொண்டுவந்து விசாரிக்கும்போது, உதவி தலைமையாசிரியை ஸ்ரீபிரியா வீட்டில் கொள்ளையடித்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். விசாரணையில், தர்மபுரி இளங்கோநகரைச் சேர்ந்த முகைதீன் (33) சாதிக்பாட்சா (29) என்பதும், இவர்கள் இருவருமே சகோதரர்கள் என்பதும் தெரியவந்தது.

அதுமட்டுமல்லாமல் இந்த கொள்ளை சம்பவத்தில இவர்களோடு 3வது சகோதரரான ஷாஜகான் ( 26) என்பவரும் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. மேலும் இந்த சகோதரர்களுக்கு பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பதே வாடிக்கையாக வைத்திருப்பதும் தெரியவந்தது.

இதனைத்தொடர்நது முகைதீன் மற்றும் சாதிக்பாட்சா ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூபாய் 1 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும், 8 பட்டுப்புடவைகளையும், வெள்ளி விளக்குகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் கொள்ளையடிக்க பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் சுமார் 40 பவுனுக்குமேல் கொள்ளையடிக்கப்பட்ட தங்கநகைகள் குறித்து கைது செய்யப்பட்ட சகோதரர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை செய்து வருகின்றனர்.  இவர்களுடைய மற்றொரு சகோதரரான ஷாஜகானை பிடித்தால் உண்மை நிலவரம் தெரியவருமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News