பட்டுக்கோட்டை பகுதியில் தொடர் மழை: தண்ணீரில் மிதக்கும் உப்பளங்கள்
தம்பிக்கோட்டை, மறவக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் ஆகிய பகுதி உப்பளங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது;
பட்டுக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் உப்பளங்களில் தண்ணீர் சூழ்ந்தது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. 6 மணிக்கு தொடங்கிய மழை இரவு 11 மணி வரையிலும் தொடர்ந்து பெய்து வந்தது . இதனால் பெரும்பான்மையான தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. தஞ்சை மாவட்ட கடலோர பகுதிகளான தம்பிக்கோட்டை, மறவக்காடு, அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள உப்பளங்களில் மழைநீர் சூழ்ந்து, உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டதால், உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து உப்பளங்களில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் மூலம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள உப்பளங்களில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.