பட்டுக்கோட்டை அருகே வாலிபர் மர்மமான முறையில் உயிரிழப்பு
பட்டுக்கோட்டை அருகே வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் (வயது 32.) இவர் திருமணம் ஆகாத நிலையில் தன் தாயாருடன் அதே பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக இவர் வீட்டுக்கு வரவில்லை என கூறப்படுகிறது. மேலும் தனது நண்பர்களையும் சந்திக்கவில்லை,
இந்நிலையில் இன்று காலை நடுவிக்கோட்டை பஸ் நிறுத்தம் அருகே முருகானந்தம் முகம் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இறந்து கிடந்த முருகானந்தத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வு செய்வதற்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இறப்பு குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
முருகானந்தத்தின் முகத்தில் தீக்காயம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இவர் கொலை செய்யப்பட்டு இருப்பாரோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.