மனவளர்ச்சி குன்றிய காப்பகத்தில் இருந்து எலும்பு கூடுகள் கண்டெடுப்பு

மனவளர்ச்சி குன்றிய காப்பகத்தில் உள்ள சிறுவனை துன்புறுத்திக் கொன்றதாக கொடுத்த புகாரின் பேரில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் மண்டை ஓடு மற்றும் எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்டது.

Update: 2021-07-12 16:00 GMT

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை பகுதியில் அவிஸோ மனவளர்ச்சி குன்றிய காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் 20க்கும் மேற்பட்ட மன வளர்ச்சி குன்றிய சிறுவர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த மன வளர்ச்சி குன்றிய காப்பகத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை துன்புறுத்தி கொன்றதாகவும் இதனை விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காப்பகத்தின் நிர்வாகியின் மனைவியே உள்துறை செயலாளருக்கு புகார் அளித்திருந்தார். இதனைஅடுத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் காப்பகத்தை ஆய்வு செய்தனர். 

இந்நிலையில்,தற்பொழுது பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் மற்றும் வட்டாட்சியர் தரணிகா ஆகியோர் தலைமையில், மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் உடலை தேடும் பணி நடைபெற்றன. முன்னதாக அந்த நிர்வாகியின் மனைவி, சிறுவனை கொன்று புதைக்கப்பட்ட இடத்தை குறியிட்டுக்காட்டியதையடுத்து அந்த இடத்தை அதிகாரிகள் தோண்ட உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் அந்த இடத்தில் 3 அடி ஆழம் தோண்டும் போதே மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடு தென்பட்டது. இதனையடுத்து அந்த மண்டையோடு மற்றும் எலும்புக்கூடு ஆகியவற்றை அதிகாரிகள் சுகாதாரத்துறையினரிடம் ஆய்வுக்கு உட்படுத்த ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News