மதுக்கூரில் போலிமருத்துவர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை: ரூ1.20 கோடி பறிமுதல்

சித்த மருத்துவ படிப்பு படித்து விட்டு ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து வந்தது;

Update: 2021-08-13 04:30 GMT

மதுக்கூரில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் அலோபதி சிகிச்சை அளிப்பதாக வந்த புகாரையடுத்து, இரண்டு கிளினிக்கில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் அறிவழகனுடைய கிளினிக்கில் 1 கோடியே 12  லட்சம் கைப்பற்றப்பட்டது- வருமான வரித்துறை அதிகாரிகள் நள்ளிரவிலும் சோதனை.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகில் உள்ள மதுக்கூர் பேரூராட்சியில் மாதவன், அறிவழகன் ஆகிய இரண்டு மருத்துவர்கள் முறையாக அலோபதி மருத்துவ படிப்பு படிக்காமல் ஆங்கில வைத்தியம் செய்துவருவதாக வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, இருவரது மருத்துவமனையையும் சப்கலெக்டர் பாலசந்தர் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் தலைமையில் காவல்துறையினரும் சோதனையிட்டனர். . இதில் எந்தவித சான்றுகளும் இல்லாமல் மருத்துவம் பார்த்ததாக மாதவன் என்பவரை போலீசார் கைது செய்து அவரது மருத்துவமனையை சீல் வைத்தனர்.

இதேபோல அறிவழகனுடைய கிளினிக்கை ஆய்வு செய்தபோது,அவர் சித்த மருத்துவ படிப்பு படித்து விட்டு  ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதுதவிர அவரது கிளினிக்கில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட போது கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து  வருமான வரித்துறை அதிகாரிகள் அறிவழகன் கிளினிக்கில் ஆய்வு மேற்கொண்டு 1 கோடியே 12  லட்சம் ரூபாய் பணத்தை கைப்பற்றினர். மேலும் நள்ளிரவிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்றதோடு,அறிவழகனிடம் இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டுக்கோட்டை சப்கலெக்டர் பாலசந்தர் மற்றும் டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் ஆகியோர் அங்கேயே முகாமிட்டுள்ளனர்.

Tags:    

Similar News