பட்டுக்கோட்டை: காவலர் வீட்டுக்கு தீவைப்பு- போலீசார் விசாரணை
பட்டுக்கோட்டை குற்றப்பிரிவு காவலர் வீட்டிற்கு நள்ளிரவில் தீ வைத்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.;
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில், குற்றப்பிரிவில் காவலராக வேலை பார்த்து வருபவர் மருது. இவர் பட்டுக்கோட்டை அருகே உள்ள புக்கரம்பை கிராமத்தில் வசித்து வருகிறார். மருது, வழக்கு தொடர்பாக விசாரணை செய்வதற்காக வெளியூர் சென்றுவிட்டார்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு திடீரென மருதுவின் வீடு தீப்பற்றி எரிவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முற்பட்டனர். இருந்தும் தீ முற்றிலுமாக பரவி வீடு மற்றும் அதில் உள்ள நகை, பணம் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் சேதமாகின. இதுபற்றி வெளியூரில் உள்ள மருதுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதுதொடர்பான புகாரின் பேரில் சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக காவலர் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதா?என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.