தஞ்சையில் வெறிச்சோடிய சாலைகள்
தஞ்சையில் தடை உத்தரவால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி முழு ஊரடங்கு போல் சாலைகள் காட்சி அளித்தன.
கொரோனா 2-ம் அலை வேகமாகப் பரவி வருவதை தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் வணிக நிறுவனங்கள் மற்றும் தேநீர் கடைகள் உணவகங்கள் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் டாஸ்மாக் கடைகளும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும் எனவும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று மதியம் 12 மணியுடன் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளதால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.
குறிப்பாக பட்டுக்கோட்டை பேருந்து நிலையம், மணிகூண்டு மற்றும் கும்பகோணத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பாலக்கரை, டைமண்ட் தியேட்டர் சாலை, உச்சி பிள்ளையார் கோவில், பழைய மீன் மார்க்கெட், நால் ரோடு, தெற்கு வீதி, காந்தி பூங்கா, மடத்து தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் மக்கள் கூட்டம் இன்றி முழு ஊரடங்கு போல் காட்சி அளித்தது.