ஒரத்தநாடு அருகே இடிந்து விழும் ஆபத்தான நிலையில் தடுப்பணை
அக்னி ஆற்றில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 7.5 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணை இடிந்து விழும் ஆபத்தில் உள்ளது;
அக்னி ஆற்றில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூபாய் 7.5 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணை இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே நெய்வேலி பகுதியில் உள்ள அக்னி ஆறு மூலம் சுமார் 600 ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசனம் வசதி பெறுகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணித்துறை மூலம் ஒப்பந்த அடிப்படையில் 7.5 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டது.
இந்த தடுப்பணை உறுதியாக கட்டப்படவில்லை என்று 2017 ஆம் ஆண்டு விவசாயிகள் குற்றம் சாட்டி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அதனை விசாரித்த நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர் அதனை ஆய்வு செய்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆய்வின் அடிப்படையில் அணை உறுதித் தன்மையுடன் இருப்பதாக செங்கிப்பட்டி பொறியியல் கல்லூரி உதவிபேராசிரியர் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து இருக்கும் இந்த தடுப்பணை தற்பொழுது பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர் .
தஞ்சை மாவட்ட பகுதிக்கு நீராதாரம் தேவையை கருதி பலகோடிசெலவில் கட்டப்பட்ட இந்த தடுப்பணையால் பயனில்லை என்றும், எப்போது வேண்டுமென்றாலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதாகவும், எனவே அரசு உடனடியாக இதை சரி செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.