டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை: சுமார் 12 ஆயிரம் ஹெக்டர் நெல் பயிர் பாதிப்பு
குறுவை பயிர்கள் மழை நீரில் மூழ்கி நிலத்தில் சாய்ந்துள்ளதால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்;
டெல்டா மாவட்டங்களில் விட்டு விட்டு பெய்யும் தொடர் மழையால், தஞ்சை மாவட்டத்தில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் குறுவை நெல் சாகுபடி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதையடுத்து, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 3.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. தற்போது பணிகள் முடிவடைந்து, அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் குருவை சாகுபடி முழுமையாக பாதிப்படைந்துள்ளன. தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த குறுவை பயிர்கள், அனைத்தும் மழை நீரில் மூழ்கி விளை நிலத்தில் சாய்ந்துள்ளன. இதனால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மாப்பேட்டை காசவளநாடு புதூர், வெட்டிக்காடு உள்பட மாவட்டம் முழுவதும் சுமார் 12 ஹெக்டர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மழையால் பயிர்கள் அனைத்தும் மூழ்கியுள்ளதால் அறுவடை செய்வதற்கு கூடுதல் செலவும், நேரமும் ஆகும் . ஒரு ஏக்கருக்கு 2 மணி நேரம் வரை அறுவடை இயந்திரம் பயன்படுத்தினால், தற்போது நான்கு மணி நேரம் வரை தேவைப்படும்.
இதனால் கூடுதலாக ரூ. 3,000 வரை கூடுதல் செலவு பிடிக்கும். ஏக்கருக்கு 20 மூட்டை கிடைக்க வேண்டிய இடத்தில், இந்த பாதிப்பால் 15 மூட்டைகள் தான் கிடைக்கும். எனவே பல்வேறு பகுதிகளில், இதுவரை நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கவில்லை. எனவே உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து நெல்லின் ஈரப்பதம் 20% உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளை காக்க வைக்காமல் கொள்முதல் செய்தால் மட்டுமே குறுவை சாகுபடியில் விவசாயிகள் நஷ்டத்திலிருந்து தப்பிக்க முடியும் எனவும் தெரிவித்தனர்.